எந்த மிரட்டலுக்கும் பணியாது எமது போராட்டம் – விஜயகாந்த்

பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்த முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

vijaya-kanth

நல்லூர் ஆலய பின் வீதியில் நேற்று காலை 10 மணி முதல் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியினர் விசாரணைகள் இன்றி நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்றிரவு இரவு 7 மணியளவில் உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திற்கு வந்த பொலிசார் உண்ணாவிரத நடைபெறும் இடத்தில் உள்ள கொட்டகைக்கு அருகில் இருந்த கடையில் இருந்து சட்டவிரோதமாக மின் பெற்று இருந்ததாகவும் அனுமதி இன்றி பாட்டு ஒலிபரப்பியதாகவும் கூறி அக் கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்தை கைது செய்து யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அத்துடன் மின் பெற பயன்படுத்திய வயர், மின்குமிழ் மற்றும் பாட்டு ஒலிபரப்புவதற்கு பயன்படுத்திய சாதனங்கள் என்பவற்றையும் பொலிசார் பறிமுதல் செய்திருந்தனர்.

விஜயகாந்தை கைது செய்து கொண்டு சென்ற பொலிசார் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்துள்ளனர்.

அதேவேளை உண்ணாவிரதம் இருப்போரினது வீடுகளுக்கு சென்ற இனம்தெரியாத நபர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு மிரட்டியதாகவும்,

அந்த மிரட்டலுக்கும் பணியாது எமது போராட்டம் திட்டமிட்ட படி நாளை மாலை 5 மணிவரை நடைபெறும் என விஜயகாந் தெரிவித்தார்.