எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரேவழி!

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே வழி. எனினும் இது குறித்த பேச்சுக்களில் தீவிரத்தன்மை தென்படவில்லை. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

suresh

கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

பௌத்த துறவியொருவரால் அனைத்து சமூகங்களினதும் வாக்குகளையும் பெறமுடியாது. அவர் எவ்வளவு நேர்மையானவராக இருந்தாலும் தமிழ் முஸ்லிம் மக்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதே தற்போதைய நிலவரம். ஜனாதிபதித் தேர்தல் குறித்து அதிகளவில் விவாதிக்கப்படுகின்றது. எனினும் இந்தத் தேர்தலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலோ எப்போது நடைபெறும் என்பது எவருக்கும் தெரியாது. இதனால் எமது கட்சி இதுகுறித்து ஆராயவில்லை. நாங்கள் எந்த வேட்பாளரையும் ஆதரிப்பது குறித்த நிலைப்பாட்டை எடுக்கவில்லை. இதற்காகன நிபந்தனைகள் குறித்தும் சிந்திக்கவில்லை. எனினும் இந்த அரசாங்கத்தால் நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் நாங்கள் சில முக்கிய விடயங்களைக் கருத்திலெடுக்க வேண்டியிருக்கும்.

யுத்தத்திற்கு பின்னர் நாங்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். எமது முன்னுரிமைக்குரிய விடயங்களுக்கு அவர்கள் தீர்வுகாணவில்லை. குறிப்பிட்ட வேட்பாளர் யாராக இருந்தாலும் அவருடன் இந்த விடயங்கள் குறித்து ஆராயப்படும், ஆரம்ப காலத்திலிருந்தே நாங்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை எதிர்த்துவருகிறோம்.

இது நாட்டிற்கு பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. சர்வாதிகாரத்திற்கு வழிவகுத்ததும் இதுவே. அரசாங்கம் 18 ஆவது திருத்தத்தை கொண்டுவந்தது. ஜனாதிபதி தேர்தலில் எத்தனை தடவையும் போட்டியிடலாம். இது சர்வாதிகாரத்திற்கே வழிவகுக்கும். தமிழ் தேசிய கூட்டமைப்பால் இதனை அனுமதிக்க முடியாது.

தனித்தனியாகப் போட்டியிடுவது சிறந்த தந்திரோபாயமாக இருக்க முடியாது என்பதை எதிர்க்கட்சிகள் உணரவேண்டும். ஜனாதிபதியை தோற்கடிக்க விரும்பினால் அவர்கள் ஒன்றுபடவேண்டும். இதன் காரணமாகவே வலுவான பொதுவேட்பாளரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நான் கருதுகிறேன்.

எனினும் துரதிஷ்டவசமாக எதிர்க்கட்சிகள் அதற்கு முழுமையாக தாயாராகவில்லை. முக்கிய எதிர்க்கட்சிகள் எவையும் இதுகுறித்து தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவில்லை.

நாங்கள் மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தை தோற்கடிக்க விரும்புகிறோம். ஜனாதிபதியும் அரசாங்கமும் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நாட்டை ஆளத் தவறிவிட்டனர்.

வடக்கு, கிழக்கு மக்களின் துயரங்களை ஒரு பக்கம் வைத்து விட்டு நாட்டின் ஏனைய பகுதிகளை பாருங்கள். எங்கும் சர்வாதிகாரமும், குடும்ப ஆட்சியும் தலைவிரித்தாடுகின்றது. யாரும் இந்த நாட்டில் வாழ விரும்பவில்லை. இராணுவமே இந்த நாட்டை ஆளுகின்றது. நாங்கள் இவற்றை தோற்கடிக்கக் கூடிய உறுதியான வேட்பாளரை விரும்புகின்றோம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பது குறித்து என்னால் எதுவும் கூறமுடியாது,

ஆனால் நாங்கள் நிறைவேற்று அதிகார முறையை எதிர்க்கின்றோம், அதனை ஒழிப்பதற்கு யார் முன்வந்தாலும் அதனை வரவேற்போம். எனினும் யார் போட்டியிட முன்வந்தாலும் அவர் தேர்தலில் வெல்லக்கூடியவராக இருக்கவேண்டும். மக்களின் வாக்குகளை அவரால் பெறமுடியவேண்டும். நாங்கள் தேர்தலில் வெல்ல வேண்டும் – என்று குறிப்பிட்டுள்ளார்.