எதிர்ப்பு அரசியலின் ஊடாக அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ்

தேர்தல் காலங்களில் மக்களை உசுப்பேற்றி, வாக்குகளை அபகரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மக்களுக்கான அபிவிருத்திச் செயற்திட்டங்களை எதிர்ப்பு அரசியலின் ஊடாக ஒருபோதும் முன்னெடுக்க முடியாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

00ed3

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் இன்றைய தினம் (19) இடம்பெற்ற வடமாகாண ஆங்கில ஆசிரிய மாணவர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாகாணசபை என்பது எனது நீண்டகாலக் கனவாக இருந்த போதிலும், அது எமது கைகளுக்குக் கிடைக்காமல் போனவை துரதிஷ்டவசமாகும். வடமாகாணசபை எமது கைகளுக்குக் கிடைக்கப் பெற்றிருப்பின், மூன்று தொடக்கம் ஐந்து வருடங்களுக்குள் வடமாகாணத்தை செல்வம் கொழிக்கின்ற பூமியாக மாற்றியமைத்திருக்க முடிந்திருக்கும்.

வடமாகாண ஆளுநராக ஜீ.ஏ.சந்திரசிறியை ஜனாதிபதி அவர்கள் மீண்டும் சேவை நீடிப்புச் செய்துள்ள நிலையில், அவரைக் கொண்டு வடமாகாணத்தில் எதிர்வரும் காலங்களில் பல்வேறு அபிவிருத்திச் செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று நான் திட்டவட்டமாக நம்புகின்றேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் பொறுத்தவரை நடைமுறைச்சாத்தியமான வழியிலோ அல்லது நியாயமான வழியிலோ தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்காத நிலையில், நாம் நடைமுறைச்சாத்தியமான நியாயமான வழிமுறைகளின் ஊடாகவே எமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

இந்நிலையில் தேர்தல் காலங்களில் நிறைவேற்ற முடியாத, யதார்த்தமில்லாத மக்களை உசுப்பேற்றும் அரசியலை முன்னெடுத்து, மக்களிடம் வாக்குகளை அபகரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஒருபோதும் மக்களுக்கான அபிவிருத்திச் செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியாது.

எனவே, எதிர்காலங்களில் உண்மை நிலவரங்களைக் கண்டறிந்து மக்களுக்காக மக்களுடன் நின்று பணி செய்பவர்களுக்கு மக்கள் தமது ஆதரவை முழுமையாகத் தருகின்ற பட்சத்தில், பல்வேறுபட்ட அபிவிருத்திச் செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்றும் அமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

வடமாகாணப் பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர்களாகக் கடமையாற்றும் ஆசிரிய மாணவர்கள் தமது இரண்டு வருடகால பாடநெறிகளைப் பூர்த்தி செய்யும் முகமாக மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்குச் செல்ல வேண்டியதுடன், எதிர்வரும் 21ம் திகதி கையொப்பம் இடப்பட வேண்டுமெனக் கல்வியமைச்சால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதனை இடைநிறுத்தி வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஈ.பி.டி.பியின் சர்வதேசப் பொறுப்பாளர் மித்திரன், இரா.செல்வவடிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.