யாழ்.மாவட்டத்தில் கிராம சேவையாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எடுத்த முயற்சியின் பயனாக இன்றைய தினம் புதிய கிராம சேவையாளர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படுவதாக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்திற்கான கிராம சேவையாளர்களுக்குரிய வெற்றிடங்களை நிரப்பும் வகையில் இன்றைய (நேற்று) தினம் 101 புதிய கிராம சேவையாளர்களுக்கு இணைப்புக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்.மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது தலைமை தாங்கி உரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது, உங்களது ஆற்றல்களுக்கு அமைவாக இன்றைய தினம் உங்களது வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கை கிடைத்துள்ளது.
இம் மாவட்டத்தில் எமது அரசியல் நிலைப்பாட்டைப் பொறுத்தே இந்நியமனங்கள் உங்களுக்கு வழங்கப்படுகின்றன.
அரசாங்கத்தின் கொள்கையினைப் பின்பற்றி அதனை செயற்படுத்தி எமது மக்களின் நலன்சார்ந்து நீங்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
எமது சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய பிரதிநிதிகளாக நீங்கள் சரியான திசை நோக்கி முன்னேற்றகரமான வழியில் செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.
இங்கே எதிர்க்கட்சியைப் போன்ற தோற்றத்தைக் காட்டிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மக்களை தவறான திசையில் இட்டுச் செல்லவே அயராத முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தவறானதும் பொய்யானதுமான பரப்புரைகளை முன்வைத்து இந்த சமூகத்தை மேலும் மேலும் பின்நோக்கி நகர்த்துவதே அவர்களது நோக்கம்.
இதனை எமது மக்கள் இப்போது நன்கு புரிந்து கொண்டுள்ளனர் என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.