எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு

வடமாகாண சபையில் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 7 பேர் வெளிநடப்புச் செய்தனர்.

1(137)

வடமாகாண சபையின் மாதாந்தக் கூட்டத்தொடர் (14 ஆவது) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை (21) இடம்பெறுகின்றது.

இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழுவை இலங்கைக்குள் வர அனுமதிக்க வேண்டும், மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக் காலத்தை நீடித்தல் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் பிற தவறுகள் தொடர்பில் மனித உரிமைப் பேரவை விசாரணை செய்ய வேண்டும் உள்ளிட்ட பிரேரணைகளை சபையில் சிவாஜிலிங்கம் முன்வைக்க இருந்தார்.

எனினும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, நடைமுறைக்குச் சாத்தியமற்ற பிரேரணைகளை ஏற்கமுடியாது. அத்துடன், இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக நடப்போம் எனக்கூறி சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு, இலங்கைக்கு எதிராக செயற்படுகின்ற பிரேரணைகளையும் ஏற்க முடியாது என்றார்.

இந்தப் பிரேரணைகள் மன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் போது, தாங்கள் வெளிநடப்புச் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் 7 பேர் வெளிநடப்புச் செய்தனர். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர் முகமது ரயிஸ் மட்டும் சபை அமர்வுகளில் கலந்துகொண்டிருக்கின்றார்.

வடமாகாண சபையில் 8 எதிர்க்கட்சி உறுப்பினர்களும் 30 ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor