யாழ்ப்பாணம், திக்கம் பகுதியில் நாளை செவ்வாய்க்கிழமை (26) நடத்தப்படவுள்ள ஊர்வலத்துக்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனு, நிராகரிக்கப்பட்டது.
பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திக்கம் பகுதியில் நாளை எதிர்ப்பு ஊர்வலமொன்று நடத்த ஏற்பாடாகியுள்ளது. இந்நிலையிலேயே, பாதுகாப்பு காரணம் கொண்டு அவ்வூர்வலத்தை நடத்த தடையுத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை, மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை பரிசீலனைக்கு உட்படுத்திய பருத்தித்துறை நீதவான் மா.கணேசராசா, ‘ஜனநாயக நாட்டில் ஊர்வலம் நடத்துவதற்கு அனைத்து மக்களுக்கும் உரிமையுண்டு. அந்த ஊர்வலத்தில் வன்முறைகள் அசம்பாவிதங்கள் ஏற்படாமலும் அரசாங்க உடமைகளுக்கும் பொதுமக்களின் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படாமல் பொலிஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.
அத்துடன், அசம்பாவிதம் இடம்பெற்றால் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் பொதுமக்களின் பாதுகாப்பை பொலிஸார் பாதுகாக்க வேண்டும் என்றும் நீதவான் ஆலோசனை வழங்கினார்.