இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றம் சம்பந்தமாக சர்வதேச விசாரணை மேற்கொள்வதை எமது அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. உள்ளக விசாரணையை செய்வதையே எதிர்பார்க்கிறது என பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (12) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை தெரிவுக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –
யுத்தம் நிறைவடைந்து ஒரு மாதமளவில் இலங்கை வந்த ஐ. நா செயலாளர் நாயகத்திடம் யுத்த அழிவு தொடர்பில் சர்வதேச தரத்திற்கமைய உள்ளக விசாரணை மேற்கொள்வதாக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புரிந்துணர்வொன்றில் கையொப்பமிட்டார். அது நடைபெறாத நிலையிலேயே சர்வதேச விசாரணை நடத்துவதில் ஐநா முனைப்பு காட்டுகிறது.
நாமும் உள்ளக விசாரணை நடத்தவேண்டும் என்ற தீர்மானத்திலேயே உள்ளோம். எமது நாட்டில் சிறந்த சட்ட வல்லுனர்கள் உள்ளனர். சிறந்த அரச சேவை காணப்படுகிறது. விசாரணையை நாமே செய்யலாம். ஐ.நாவும் உள்ளக விசாரணையையே விரும்பியது. விசாரணைக்கென்று அவர்கள் புதிய அலுவலகம் திறக்க வேண்டும். அதற்காக நிதியொதுக்க வேண்டும். இத்தகையவற்றை தவிர்க்க அவர்கள் உள்ளக விசாரணையைத்தான் ஊக்குவித்தனர்.
கடந்த அரசாங்கம் செய்த உறுதிமொழி நிறைவேற்றப்படாமையினாலேயே சர்வதேச விசாரணையை நடத்த முயல்கின்றனர். சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டுமென்பது வடமாகாண சபையினரால் எடுக்கப்பட்ட தீர்மானம் அது அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் மாகாண சபைகள் எடுக்கும் தீர்மானங்கள் அனைத்தும் சட்டமாக்கப்படும் சாத்தியக்கூறு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.