உலகின் மிகப்பெரிய பறவையின் புதைபடிமம் கண்டுபிடிப்பு

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பறவை இனங்களிலேயே மிகப்பெரிய பறவையின் புதைபடிமத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

giant_bird

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிமத்தை விரிவாக ஆராய்ந்ததில், மிகப்பெரியதொரு பறவையின் பாதுகாக்கப்பட்ட எச்சங்களை அதில் இவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த பறவைகள் தமது இறக்கைகளை விரித்தால் அதன் அகலம் ஆறு மீட்டர் முதல் ஏழறை மீட்டர் வரை இருந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள். அதாவது 20 முதல் 24 அடி அகல இறக்கைகளை கொண்டதாக இந்த பறவை இருந்திருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கணக்கு.

தற்போது உயிர்வாழும் பறவைகளிலேயே அல்பட்ராஸ் என்னும் கடற்பறவைதான் மிகப்பெரிய பறவையாக அறியப்படுகிறது. இவற்றின் இறக்கைகளின் அகலம் அதிகபட்சம் மூன்று மீட்டர் என்று கணக்கிடப்படுகிறது. அப்படி பார்க்கும்போது இந்த புதைபடிம பறவை அல்பட்ராஸைவிட இரண்டு மடங்கு பெரிய பறவையாக இருந்திருக்கும் என்பது இந்த விஞ்ஞானிகளின் கணக்கு.

இரண்டரை கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக கணக்கிடப்படும் இந்த பறவையின் உருவத்தை விஞ்ஞானிகள் கணினி மூலம் மாதிரி வடிவை உருவாக்கிப் பார்த்தபோது அந்த பறவை வானில் பறந்தபோது மிகச்சிறப்பாகவும், கம்பீரமாகவும், லாவகமாகவும் பறந்திருக்கக்கூடும் என்று கணித்திருக்கிறார்கள். ஆனாலும் இந்த பறவையின் மிகப்பெரிய உருவமும் எடையும் அது நிலத்திலிருந்து வானத்துக்கு மேலெழும்பும் போதும் வானில் இருந்து நிலத்துக்கு கீழிறங்கும்போதும் அதற்கு கடும் சிரமத்தைக் கொடுத்திருக்கக்கூடும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
பெலகோர்னிஸ் சந்தெர்ஸி (Pelagornis sandersi) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த பறவையின் புதைபடிமம் தெற்கு கரோலினா கடற்பரப்பில் கண்டெடுக்கப்பட்டது. இது கடல்நாரையின் முன்னோர்களில் ஒன்றாக இருந்திருக்கக்கூடும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.

Recommended For You

About the Author: Editor