புலம்பெயர் தமிழர் அமைப்புகள், தனிநபர்களுக்கு இலங்கை அரசாங்கம் விதித்த தடை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு வருவதாக வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சின் பேச்சாளர் திருமதி மஹிஷினி கொலன்னே தெரிவித்தார்.
நேற்று வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சில் அவர் நடத்திய அமைச்சில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தால் கடந்த வருடம் உலகத் தமிழர் பேரவை உள்ளிட்ட 16 புலம்பெயர் அமைப்புகள் மற்றும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை குறித்து அரச வர்த்தமானி மூலமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தத் தடைப் பட்டியல் குறித்து வருடாந்தம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்றும், பாதுகாப்பு அமைச்சு இந்தப் பட்டியலை தற்போது மீளாய்வு செய்து வருகின்றது என்றும் அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
அண்மையில் வெளிநாடுகளில் உலகத்தமிழர் பேரவையின் பிரதிநிதிகளை அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்துப் பேசியிருந்தார் என செய்திகள் வெளியாகின. இந்நிலையிலேயே இந்தத் தடைப்பட்டியல் குறித்து மீளாய்வு செய்யப்படுகிறது.
எனவே அந்த அமைப்பின் மீதான தடை நீக்கப்படுமா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு “அது சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்ட அமைப்பு. ஆனால் அந்த அமைப்புக் குறித்து மீளாய்வு செய்கிறோம்.” என பேச்சாளர் மேலும் தெரிவித்தார்