உறுதியான ஆதாரங்கள் கிடைத்தால் டக்ளஸ்,கருணா, பிள்ளையான் ஆகியோருக்கு எதிராக விசாரணை! – ஜனாதிபதி ஆணைக்குழு

missing-people-presidentதமிழ் மக்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா), கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோருக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றால், மூவருக்கு எதிராகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்துள்ளார்.

அத்துடன் இறுதிக் கட்டப்போரின் முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பில் உறுதியான சாட்சியங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என்றும் அவர் குறிப்பிட் டுள்ளார்.

காணாமற்போனோர் தொடர்பில் 5 பகிரங்க அமர்வுகளை ஆணைக்குழு இதுவரை நடத் தியுள்ளது. கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு தடவைகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு தடவைகளும் ஆணைக்குழுவின் பகிரங்க அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

ஆணைக்குழுவுக்கு இது வரையில் 19 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள போதும் 750 முறைப்பாடுகளே இது வரையில் விசாரித்து முடிக்கப்பட்டுள்ளன. ஆணைக்குழுவின் காலப் பகுதி அடுத்த மாதத்துடன் நிறைவடையவுள்ளது. எனவே எஞ்சிய முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு கால நீடிப்பு அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கடந்த காலங்களில் கடத்திச் செல்லப்பட்டமை தொடர்பில் தற்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோருக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள், சாட்சியங்கள் மூலம் சமர்ப்பிக்கப்பட்டால், அவை தொடர்பில் ஆணைக்குழு மூவரையும் விசாரணைக்கு உட்படுத்தும்.

மேலும் போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தினரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்கள் தொடர்பிலும் உறுதியான சாட்சியங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த முறைப்பாடுகள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் இன்னும் இரண்டு அல்லது மூன்று சுற்று அமர்வுகளை நடத்த வேண்டியுள்ளது. அத்துடன் அடுத்து மன்னார் மாவட்டத்திலும், திருகோணமலை, சியம்பலண்டுவ, வெலிஓயா, வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் அமர்வுகளை நடத்தவுள்ளது என்றார்.