உதயன் ஆசிரியர் மீதான தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்பில்லை: றெமிடியஸ்

Mureyappuஉதயன் ஆசிரியர் குகநாதன் மீதான தாக்குதலுக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. அரசியல் ரீதியில் என் மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டே இந்த தாக்குதலாகும்’ என்று சட்டத்தரணியும் யாழ். மாநகர சபை உறுப்பினருமான முடியப்பு றேமீடியஸ் தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

‘உதயன் ஆசிரியர் மீதான தாக்குதலில் உங்களுக்கும் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றதே. இது தொடர்பில் உங்கள் விளக்கம் என்ன?’ என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அவர், ‘உதயன் ஆசிரியர் குகநாதன் மீதான தாக்குதல் உதயன் நிர்வாகத்தின் உள் முரண்பாடு காரணமாகவே இடம்பெற்றது என்று பொலிஸ் விசாரணையின் போது நான் தெரிவித்திருந்தேன்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் ஒரு சட்டத்தரணிக்கும் தொடர்பிருப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருந்தார். அவரது கருத்தை அடுத்து, ‘கைது செய்ய முடிந்தால் கைது செய்யட்டும்’ என்று ஊடகமொன்றினூடாக பகிரங்க சவால் விடுத்தேன். என் மீது குற்றம் இல்லை என்ற துணிவில் தான் இந்த சவாலை விடுத்தேன்’ என்றார்.

‘குகநாதன் தாக்கப்படும் சம்பவத்திற்கு 3 நாட்களுக்கு முன்னர், குறித்த பத்திரிகை அலுவலகத்தில் அவர் தனிமையில் ஓர் அறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

எனக்கு அவர் மீது தாக்குதல் நடத்துவதற்கு எந்தவிதமான பகையுணர்வும் இல்லை. நான் ஒருவரை தாக்கவேண்டும் என்றால் நேரடியாக சென்று தாக்குவேன். ஆட்கள் வைத்து தாக்கவேண்டிய தேவையில்லை’ என்று சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்தி

த.தே.கூ யாழ். உறுப்பினர் ராஜினாமா; சு.க.வில் இணைவு