உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்தார் வடமாகாண முதலமைச்சர்!

வலி. வடக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் இணைந்து கொண்டுள்ளார்.

vicknes-waran-maviddapuram

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால், வலி. வடக்கில் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தியும், வீடழிப்பினைத் தடுத்து நிறுத்தக் கோரியும் உண்ணாவிரதப் போராட்டமொன்று மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வடமாகாண முதலமைச்சர் இன்று காலை 10.45 மணி முதல் போராட்டத்தில் இணைந்துகொண்டுள்ளார்.

இதேவேளை, வடமராட்சியிலிருந்து வலி. வடக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ளவதற்காக பொதுமக்களுடன் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து மீது இன்று புதன்கிழமை காலை வடமராட்சியில் வைத்து கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று இரண்டாம் நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றவர்கள் பயணித்த பஸ் மீதே இந்த கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.