Ad Widget

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல் கைதிகளின் கண்ணீர்க் கதறல்!

நேசத்தமிழ் உறவுகளே!

உங்களின் விடிவிற்காய் உதிரம் சிந்தி ஊருக்காய் உழைத்த நாம் இன்று உறவுகளை பிரிந்து உற்றவரை பிரிந்து பூட்டிய சிறைகளுக்குள் பட்டினி போராட்டம் நடத்துகிறோம்.

உங்கள் பிள்ளைகளாகிய எங்கள் அவல குரல் கேட்கிறதா சொல்லுங்கள்.

ஒரு மனித வாழ்க்கையின் சத்தான அரைவாசி காலத்தை சிறையில் தொலைத்து ஏக்கங்கள், தாக்கங்கள், நிராகரிப்புகள், நிராசைகள், அவமானங்கள், அருவப்புக்கள் என அனைத்தையும் சுமந்து கொண்டு நடைப்பிணங்களாய் நாட்களைக் கழிக்கின்றோம்.

அரசியல் கைதிகள் என்ற அடை மொழியில் மதத்தலைவர்களே! மனிதாபிமானிகளே! எம் தேச மக்களே சிந்தித்து செயற்படுங்கள்! ஏமை சிறை மீட்க குரல் கொடுங்கள்! உலகத்தமிழ் சமூகத்தில் உயர்வாகப் போற்றப்பட்டவர்களில் ஒரு தொகுதியான அரசியல் கைதிகளை அதே சமூகத்தால் தெரிவு செய்யப்பட்ட அரசு வஞ்சிக்கின்றது.

நின்று வேடிக்ககை பார்க்க போகின்றீர்களா? இல்லை விடுதலைக்கு வழி கோலப் போகின்றீர்களா? அகிம்சையை கையில் எடுங்கள்! அரசிடம் கேள்வி தொடுங்கள்! வயிற்று பசியை அடகு வைத்து வாழ்வுரிமை கேட்கிறோம். வாக்களித்த மக்களே! நல்லாட்சி அரசிடம் நியாயத்தை கேளுங்கள். நேசமிக்க உங்களின் பாசத்து உறவினர்கள் இங்கு பட்டினியால் துடிக்கிறோம்.

மறவர் விட்டுச் சென்ற மக்கள் உரிமையினை ஊக்கமாகத் தொடரும் தமிழகத்தின் ஆணை பெற்ற அரசியல் தலைமைகளே! இது உங்கள் தன்மான பிரச்சனை அல்லவா! துலைமை சேர் பதவிகளால் அரசியல் கைதிகளின் விடுதலை அப்பால் செல்லலாமா? தீர்க்க தரிசனமாய் தீர்மானித்து தேகத்தை உருக்கி தாகத்தோடு போராடும் அரசியல் கைதிகளின் உயிர்களுக்கு உத்தரவாதம் அளியுங்கள்! ஈழத்து சாதனைகளையும் சரித்திரங்களையும் நேசித்து பேசிப்புகழும் புகழாளர்களே! பசியில் துவண்டு பல ஆண்டு சிறை இருக்கும் சில நூறு சொந்தங்களே சிந்தித்து பார்ப்பீர்களா? சொந்த மண்ணிலே சுயாதீன புருஷர்களாக வாழ்ந்த நாம் சிறைக் கூடங்களில் சாவுப் போராட்டம் நடத்தி சோர்ந்து துடிக்கின்றோம்.

சொந்தங்களே சேர்ந்து குரல் கொடுங்கள்! மனைவி பிள்ளைகளுக்கு மேலாக மக்களை நேசித்த நாம் இன்று சிறகளில் மண்டியிட்டு சிதைகின்றோம்! வயிற்றை கட்டி வாழ்வுரிமை கேட்டு வதைபடுகின்றோம்.நேசம் மிக்க தேச மக்களே! நீட்டுங்கள் விடுதலை கரம் தட்டுங்கள் அரசின் கதவை! ஆசைகளையும் பாசங்களையும் அடமானம் வைத்து அடிமை சிறைகளில் அன்றாடம் அல்லல் படும் உங்கள் உறவுகளின் கண்ணீரை துடைக்க இன மத மொழி பேதமற்று இணைந்து கரம் கொடுங்கள் என் தேச நெஞ்சங்களே! தேர்தல் காலங்களில் மையபொருளாக பேசப்பட்ட நாம் இன்று பட்டினியில் வாடி விடுதலை கேட்கிறோம்! வாக்களித்த நீங்களும் வாய் மூடி இருக்கலாமா? வேடிக்கை பார்க்காது வெகுண்டெழுந்து வினா தொடுங்கள் விடுதலை எங்கே என! அரசியல் கைதிகளான எமது உண்ணா நோன்பு அனைத்து தமிழர்களினதும் அடையாள சின்னமாகி அகிம்சை வழியை திறக்கட்டும்.

அது ஆள்வோரின் மனச்சாட்சியை உலுக்கட்டும்! “விடுதலை கோரி உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தனர் அரசியல் கைதிகள்” என்ற அவப்பெயரை இலங்கைத் திருநாடு இனியும் சுமப்பதா? பாப்பரசர் வருகையின் போது ஆட்சி மாற்றத்தின் போது பார்த்திருந்தோம் விடுதலைக்கு. தேசிய அரசியலிலும் தேடியிருந்தோம் விடுதலையை. ஜெனிவாவுக்கு பின்னாவது கனிவான கனிவான பதில் கிடைக்கும் என கண் மூடாது காத்திருந்தோம். ஏமாற்றமே மிஞசியது ஏன் இந்த எதிர் பரிணாமம்? ஏற்ற தாழ்வு இனியும் வேண்டாம். இலங்கை தாயே எம்மை இயல்பாய் வாழ விடு! வழிகாட்டு!

இப்படிக்கு

உணவு தவிர்ப்பில் ஈடுபட்டிருக்கும் அனைத்து இலங்கை தமிழ் அரசியல் கைதிகள்

Related Posts