இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய இணைந்த தொழிற்சங்க ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஒரு பகுதி வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று(வியாழக்கிழமை) பிற்பகல் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டதுடன் ஒதுக்கப்பட்ட பகுதி போக்குவரத்துச் சபையினரிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில் தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஒற்றிணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் அ.அருள்பிரகாசம், தமது கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் போராட்டம் கைவிடப்படுவதாகவும் இன்று (நேற்று) பிற்பகல் 3 மணி முதல் பேரூந்து சேவைகள் வடக்கு முழுவதும் வழமைக்கு திரும்பும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் அனைத்து பகுதிகளிலிருந்து இலங்கை போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.
வவுனியா பழைய பேரூந்து நிலையத்தை மூடி புதிய பேரூந்து நிலையத்தில் அரச மற்றும் தனியார் பேரூந்துகளை சேவையில் ஈடுபடுமாறு வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த திங்கட்கிழமை முதல் இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற்சங்க ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில், வட.மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் விசேட குழுவினருக்கு இடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பின்போது, இருதரப்புக்கு இடையிலும் இணக்கம் காணப்பட்டதாகவும் நேற்று நண்பகலுடன் போராட்டம் கைவிடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
எனினும் உயர்மட்ட அதிகாரிகளுடனான சந்திப்பின்போது, தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்த தொழிற்சங்க ஊழியர்கள் இன்றும் தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.