இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துநர் மீது புளியங்கூடல் பகுதியில் வைத்து தனியார் பஸ் சாரதி இன்று வியாழக்கிழமை மேற்கொண்ட தாக்குதலில் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சாரதியான எம்.சுரேந்திரன் (27) மற்றும் நடத்துனரான எஸ்.பரமநாதன் (41) ஆகியோரே யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.நகரிலிருந்து இன்று (30) காலை 10.30 மணிக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து ஊர்காவற்றுறை நோக்கிப் பயணித்தது. இதேவேளை காலை 10.50 மணிக்கு அதே வழியில் யாழ்.நகரத்திலிருந்து தனியார் பஸ்ஸும் பயணித்தது.
இந்நிலையில் புளியங்கூடல் பகுதியில் இ.போ.ச பேரூந்தினை முந்திய மினிபஸ் சாரதி, பஸ்ஸிலிருந்து இறங்கி இ.போ.ச பேரூந்து சாரதியினை தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த பேரூந்து சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக, குறித்த பேரூந்து நடத்துநர் யாழ்.பேரூந்து நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததினையடுத்து, யாழ்.பேரூந்து நிலையத்திலிருந்து பிறிதொரு பஸ் அங்கு நடுவழியில் நிற்கும் பயணிகளை ஏற்றுவதற்காகச் சென்றது. இருந்தும் அந்த பஸ்ஸின் நடத்துநர் மீதும் குறித்த தனியார் பஸ் சாரதி தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதில் காயமடைந்த பஸ் நடத்துனரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவத்தினைத் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டவரைக் கைதுசெய்யக்கோரியும், அந்த வழித்தடங்கலில் ஈடுபடும் தனியார் பஸ்ஸின் அனுமதியினை ரத்துச் செய்யக் கோரியும், யாழ்.நகரத்தில் இ.போ.ச பஸ் நிலையத்தின் தெற்குப் பக்கத்தில் இருக்கும் மினிபஸ் சேவையிலீடுபவர்களை அப்புறப்படுத்தக் கோரியும் யாழ். இ.போ.ச சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
‘தெற்குப் பகுதியிலிருக்கும் மினிபஸ்காரர்கள் இ.போ.ச வளாகத்திலிருக்கும் பயணிகளை வலுக்கட்டாயமாக மினிபஸ்களில் பயணிக்க வரும்படி அழைத்துச் செல்வது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே பலமுறை முறையிட்டு சுற்றுமதில் ஒன்று அமைத்துத் தரும்படி கோரியிருந்தோம். இருந்தும் அது நடைபெறவில்லை.
இதிலிருந்தே மேற்படி முறுகல் நிலை இரண்டு தரப்பினருக்கும் ஏற்பட்டது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்த வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் மக்கள் நலன் கருதி உங்கள் போராட்டத்தினை கைவிடுங்கள் உங்கள் கோரிக்கையினை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம் எனக் கூறினார்.
எனினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘கோரிக்கையினை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தினை நிறுத்துவோம’; எனக்கூறினர்.