இவ்வாண்டில் 500பேர் சுட்டுக் கொலை: யாழ். எஸ்.பி

police2013ஆம் ஆண்டு இலங்கை முழுவதிலும் 500பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தமயந்த விஜயசிறி இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் ஊடகவியலாளர்களினால் ‘யாழ். மாவட்டத்தில் மைக்ரோ பிஸ்டல் 2009ஆம் ஆண்டிற்கு முன்னரும், அதற்குப் பின்னரும் பாவனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சி தலைவரின் பாதுகாப்பாளர் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் பயங்கரவாதக் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.அந்த கைது தொடர்பான விசாரணைகள் எந்த மட்டத்தில் இருக்கின்றதென தெரியாத நிலையில், அவ்வாறான சம்பவத்தின் போது குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரின் கட்சி அலுவலகத்தின் மீது தகுந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தால், பிரதேச சபைத் தலைவரின் கொலையினை தடுத்திருக்க முடியும்,ஆனால், ஏன் கட்சி அலுவலகத்தினை பரிசோதனை மேற்கொள்ளவில்லை என்றும் முப்படைகளைத் தவிர்ந்த ஏனையவர்களிடம் துப்பாக்கிகள் கலைவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த விஜயசிறி, ‘இலங்கை முழுவதிலும் துப்பாக்கியால் சுடப்பட்டு 2012ஆம் ஆண்டு 700 பேரும், 2013ஆம் ஆண்டு 500 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். முப்படைகளைத் தவிர்ந்த சட்டவிரோதமாக ஏனையர்களிடம் இருக்கும் துப்பாக்கிகளைக் கலைவதற்கு இம்மாதம் 15ஆம் திகதி வரை காலக்கேடு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த காலத்துக்குள் துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் தகுந்த அதிகாரிகளிடம் துப்பாக்கிகளைக் கையளிக்க வேண்டுமென்றும், அவ்வாறு துப்பாக்கிகள் கையளிக்காதவர்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் குறித்து ரி.ஐ.டி தீவிர விசாரணை: பொலிஸ் அத்தியட்சகர்