இழப்புகளுக்கு காபட் வீதிகளும் கட்டிடங்களும் பதிலாகி விடாது – என்.வீ.சுப்பிரமணியம்

tnaநாம் வாக்குரிமையினை சரியான விதத்தில் பயன்படுத்தாவிடின் அடிமை வாழ்விற்கு நாமே உரமிட்டவர்களாகிவிடுவோம்.முப்பது ஆண்டுகளிற்கு மேலான போராட்டத்தில் நாம் அடைந்த இழப்புகளிற்கு காப்பட் வீதிகளும் கட்டிடங்களும் பதிலாகி விடாது. மாறாக உணர்வுள்ள சமூகம் ஒன்றை நமது வருங்கால சந்ததிக்கு கடத்த வேண்டும்’ என்று வடமாகாண கடற்றொழில் கூட்டமைப்பின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளருமான பிரதேச சபை உறுப்பினருமான என்.வீ.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

‘வடமாகாண சபைத் தேர்தல் தமிழ் மக்களிற்கு ஒரு முக்கியமான தேர்தல். இது சலுகைக்கான போராட்டமா உரிமைக்கான போராட்டமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.

நாம் அபிவிருத்திகளுக்கு எதிரானவர்களல்ல. பூசாவிலும் ஏனைய சிறைகளிலும் எத்தனையோ தமிழ் இளைஞர்கள் யுவதிகள் வாடிக்கொண்டிருக்கின்றனர். கணவர் இருக்கின்றாரா இல்லையா எனத் தெரியாத மனைவிகளும், அப்பாவைத் தெரியாத பிள்ளைகளும் அந்தரிக்கின்ற போது அவர்களிற்கான தீர்வைக் காண வேண்டியது தற்போதைய தேவைகளாக உள்ளது.

காலம் காலமாக எமது மக்கள் வாழ்ந்த பெறுமதிமிக்க வளங்கள் நிறைந்த பகுதி உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரினால் சுரண்டப்பட்டு அந்த வளங்கள் யாவும் தென்னிலங்கைக்கு அனுப்பப்படுகின்றது.

மீன் வளங்கொழிக்கும் பகுதிகளில் தென்னிலங்கை பெரும்பான்மையினரும் ஏனைய நாடுகளைச் சேர்ந்தோரும் தொழில் செய்கின்றனர்.

எமது மீனவர்கள் நிரந்த தொழிலின்றியும் நிரந்த வருமானமின்றியும் அன்றாட வாழ்விற்கு அவலப்படுகையில் நமக்கான தீர்வுகளை நோக்கி நாம் நகரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இணக்க அரசியல் என்னும் பெயரினால் எம் மக்கள் மேலும் அடிமைப்பட்டுள்ளனர். எம்மிடம் எஞ்சியிருக்கும் முக்கியமான ஆயுதங்கள் இரண்டே. ஒன்று கல்வி. மற்றையது வாக்குரிமை. திட்டமிட்டு வடபுலத்தின் கல்வி அழிக்கப்பட்டு வருகின்றது. நாம் வாக்குரிமையினை சரியான விதத்தில் பயன்படுத்தாவிடின் அடிமை வாழ்விற்கு நாமே உரமிட்டவர்களாகி விடுவோம்’ என்றார்.