இளைஞர் வெட்டிக் கொலை :ஒருவர் அடையாளம் காணப்பட்டார்

மானிப்பாய் – சங்குவேலி பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சங்குவேலி – சிவஞானப்பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த சிவகுமாரன் பிரணவன் (வயது 31) என்பவர் கடந்த மாதம் 17ம் திகதி, வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிரதேச குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் போது, இளவாலை வழிப் போக்குவரத்து பேருந்தின் உரிமையாளரான சிவகுமாரன் பிரணவனின் சகோதரரை கொலை செய்ய வந்த போது, சந்தேகநபர்கள் ஆள்மாறி பிரணவனை வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என தெரியவந்தது.

இதன்படி, ஆலடி – மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று புதன்கிழமை மல்லாகம் நீதிமன்றில் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது.

இதன்போது சாட்சிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை தாண்டியும், அவர் மல்லாகம் நீதிமன்றில் ஆஜராகி கொலைக்கு உடந்தையாக வந்த நபரை அடையாளம் காட்டினார்.

அடையாள அணிவகுப்பின் பிரகாரம் குறித்த நபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைத்ததுடன், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த ஒருவரையும், பிரணவனின் கொலை செய்ததாக கூறப்படும் ஏனைய மூவரையும் 10 நாட்களுக்குள் கைதுசெய்யுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன் சந்தேகநபர்களை எதிர்வரும் 28ம் திகதி புதன்கிழமை, நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்ட, மல்லாகம் நீதிமன்ற நீதிபதி யூட்சன், வழக்கினை ஒத்திவைத்தார்.

Recommended For You

About the Author: Editor