Ad Widget

இளம் குடும்பஸ்தரின் மீது மூவர் கொண்ட குழு தாக்குதல் : குற்றவாளியை பிடிப்பதில் பொலிஸார் அலட்சியம்

தொழில் போட்டி காரணமாக இளம் குடும்பஸ்தர் மீது மூவர் கொண்ட குழு தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் யாழ்.போதனா வைத்தியசாலையின் விபத்து அதி தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாவடி ஐந்து வேம்படி பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அருந்தவச் செல்வன் அருண்றொஜீவ் (வயது-33) என்பவரே மேற்படி தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவராவார்.

கடந்த வியாழக்கிழமை இரவு 9மணியளவில் உப்புமட பிள்ளையார் கோவிலடியிலுள்ள ஒட்டுத் தொழில் கடையயான்றிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கடைக்கு தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தரை தந்திரமாக அழைத்த மூவர் அவர் மீது இரும்பு பைப்பினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்து மயக்கமுற்ற குடும்பஸ்தரினை தாக்குதலாளிகளே யாழ்.போதனா வைத் தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தவுடன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

எனினும் வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களது வாகன இலக்கத்தகடு மற்றும் பெயர்கள், அடையாள அட்டை இலக்கம் என்பவற்றை பதிவு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரிடம் குடும்பஸ்தர்களின் உறவினர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டதனை தொடர்ந்து யாழ்.போதனா வைத்தியசாலைத் தகவலடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் நேற்று மதியம் வரை கைது செய்யப்படவில்லை எனவும் இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாரிடம் கேட்டால் எம்மை பிடித்து தருமாறு அலட்சியமாக கூறுவதாகவும் தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த சில மாதங்களாக இவ்வாறான தனிநபர் மீதான தாக்குதல்களும் கொலை முயற்சிகளும் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts