இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் அசமந்தப் போக்கினைக் கடைப்பிடிக்குமானால் கடுமையான சர்வதேச அழுத்தங்களைச் சந்திக்க நேரிடும் என ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிப் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிப் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்த நிலையில், நேற்று (திங்கட்கிழமை) நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
”நிலைமாறுகால செயற்பாடுகள் தொடர்பில் திருப்தியளிக்கும் வகையில் இலங்கையின் செயற்பாடுகள் இல்லை. யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக பிரேசில் நாட்டினால் மேற்கொள்ளப்பட்டிருந்த நடவடிக்கையினை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
நிலைமாறுகால நீதியினைச் சரியானமுறையில் இலங்கை நடைமுறைப்படுத்தியிருந்தால், இவ்வாறான நிலைமை ஏற்பட்டிருக்காது.
மேலும் இலங்கை அரசு தொடர்ந்தும் வினைத்திறன் மிக்க செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் காலந்தாழ்த்துமானால், பிரேசில் போன்று சர்வதேச அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கும்” என பப்லோ டி கிரிப் மேலும் தெரிவித்துள்ளார்.