இலங்கையில் கொரோனா மரணம் 21ஆகக் குறைந்தது!

கொரோனாவால் மரணித்தார் என நேற்று அறிவிக்கப்பட்ட 22ஆவது நபர் தற்கொலை செய்து கொண்டவர் என்பதால், அவர் கொரோனா தொற்றினால் மரணித்தார் எனக் கருதமுடியாது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீரவை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் தமது அறிக்கையில் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளது.

தற்கொலைக்கு முயன்ற நிலையில் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 27 வயதான இளைஞர் கடந்த 31ஆம் திகதி உயிரிழந்தார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்பின்னர், கொரோனா காரணமாக இலங்கையில் 22ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று மதியம் அறிவித்திருந்தது.

எனினும், அவரது மரணம் தற்கொலை என்பதன் காரணமாக கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பு 21ஆகவே உள்ளதாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor