இலங்கையின் அழுத்தத்தினால் தமிழீழம் நீக்கப்பட்டுள்ளது!

அவுஸ்திரேலியாவில் நடாத்தப்பட்டுவரும் தேசிய சனத்தொகை கணக்கெடுப்பில், பிறந்த நாடு என்ற என்ற கேள்விக்கு அளிக்கப்படும் விடையாக தமிழீழம் எனத் தெரிவுசெய்யப்பட்ட விடை, சிறீலங்காவின் அழுத்தத்தினால் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவுஸ்ரேலிய புள்ளிவிபரப் பிரிவினால் தேசிய சனத்தொகைக் கணக்கெடுப்பு இணையத்தளம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் பிறந்த நாடு என்பதற்கு பல அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத நாடுகளின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இதனால் அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள் தமது நாடு தமிழீழம் எனக் குறிப்பிடத் தொடங்கினர்.

இதனையடுத்து, கடந்த 6 மற்றும் 7ஆம் திகதிகளில் கன்பராவிலிருக்கும் சிறீலங்காத் தூதரகத்துக்கு பெருமளவான தொலைபேசி அழைப்புக்கள் வந்திருந்தன.

அதையடுத்து, தமிழீழத்திற்கு அவுஸ்ரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களத்திடமும், அவுஸ்ரேலிய புள்ளிவிபரவியல் பிரிவிடமும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கடிதத்தையடுத்து, அவுஸ்திரேலியாவுக்கான சிறீலங்காத் தூதுவர் ஸ்கந்தகுமார் அவுஸ்திரேலிய புள்ளிவிபரவியல் பிரிவுடன் நேரடியாகப் பேசினார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் அவுஸ்திரேலியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கமாக உள்ளபோதில் எவ்வாறு தமிழீழம் என்ற தெரிவு இடம்பெற்றது என அவுஸ்திரேலியப் புள்ளிவிபரவியல் திணைக்களத்திடம் சிறீலங்காத் தூதுவர் கேள்வியெழுப்பினார்.

இந்நிலையில் அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு தமிழீழத்தை நீக்குவதாக கடந்த 9ஆம் திகதி சிறிலங்கா தூதுவருக்கு உறுதி அளித்தது. இதற்கமைய அன்று பிற்பகல் 2.30 மணியளவில், தமிழீழம் நீக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor