2009-ம் ஆண்டுக் காலப்பகுதியில், ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் அதிகாரபூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நிதி நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததை தான் கண்டுபிடித்து விசாரணை நடத்த அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததாக ஜெனீவாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் தமாரா குணநாயகம் அண்மையில் பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.
தமாரா குணநாயகத்துக்கு முன்னதாக ஜெனீவாவில் பணியாற்றியவர், தற்போது இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலாளராகவுள்ள ஷெனுக்கா செனவிரட்ண.
ஷெனுக்காவின் காலத்திலேயே விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நிறுவனத்துடன் அந்தக் கட்டடத்தை புதுப்பிக்கும் வேலை நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜேவிபி குற்றம் சாட்டிவருகின்றது.
2012-ம் ஆண்டில் அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகள் நால்வர் சுவிட்சர்லாந்துக்கு சென்று நடத்திய ஆய்வின் முடிவில் தயாரிக்கப்பட்டது என்று நம்பப்படுகின்ற அறிக்கை ஒன்றையும் ஜேவிபி ஊடகங்களுக்கு கசியவிட்டிருந்தது.
இந்த சூழ்நிலையில், வெளியுறவு அமைச்சின் செயலாளர் ஷெனுக்கா செனவிரத்ன மீது அண்மைக் காலங்களில் சுமத்தப்பட்டிருக்கின்ற குற்றச்சாட்டுக்களை மறுத்து வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஷெனுக்கா ஜெனீவாவில் பதவியேற்ற 2009- நவம்பர் 15-ம் திகதிக்கு முன்னர், அதாவது நவம்பர் 5-ம் திகதியே குறித்த கட்டடத்தை புதுப்பிக்கும் ஒப்பந்தத்துக்கான முன்னேற்பாடுகள் அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாக ஜீ.எல் பீரிஸ் கூறியுள்ளார்.
அத்தோடு, ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்ற சுவிஸ் நிறுவனத்தின் உரிமையாளரான பி.டி. துரைராஜா என்பவர், விடுதலைப் புலிகளின் கறுப்பு பண மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்ததாக வெளியான குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்று, 2012-ம் ஆண்டில் சுவிஸ் காவல்துறை புலனாய்வு அதிகாரி ஒருவர் அளித்த பதிலை மேற்கோள்காட்டியிருக்கிறார் ஜீ.எல். பீரிஸ்.
ஷெனுக்கா செனவிரத்னவுக்கு முன்னர் அவரது பொறுப்பில் இருந்தவர், தற்போது இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைகளை விமர்சித்துவருகின்ற தயான் ஜயதிலக்க.
‘2009-ம் ஆண்டு மே 26-27-ம்திகதிகளில் நடந்த இலங்கைக்கு எதிரான சிறப்பு கூட்டத்தொடர்களில் நாங்கள் வெற்றிபெற்றோம். அந்த வெற்றியிலிருந்து 6 வாரங்களின் பின்னர் என்னை அந்தப் பொறுப்பிலிருந்து பதவிநீக்கம் செய்தார்கள். ஆகஸ்ட் முதலாம் திகதி நான் கொழும்பு வந்துவிட்டேன்’ என்றார் 2009-ம் ஆண்டு இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்த காலத்தில் ஜெனீவாவில் இலங்கையின் பிரதிநிதியாகப் பணியாற்றிய தயான் ஜயதிலக்க.
விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததாக பரவலானக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கின்ற ஷெனுக்கா செனவிரத்னவை காப்பாற்றுகின்ற முயற்சியிலேயே வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஈடுபட்டுள்ளதாக ஜேவிபி குற்றம் சாட்டுகின்றது.
இலங்கையில் ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் விடுதலைப் புலிகளோடு தொடர்பு வைத்திருந்தார்கள் என்று வெளியாகின்ற குற்றச்சாட்டுக்களுக்கு எதிரணி அரசியல்வாதிகளுடன் ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்துவருகின்றன.
ஐரோப்பாவில் விடுதலைப் புலிகள் மீது 2006-ம் ஆண்டில் தடை விதிக்கப்பட்டதில் நடைமுறை ரீதியான தவறுகள் நடந்துள்ளதாக ஐரோப்பிய நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்புடன் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய லண்டன் விஜயத்தை தொடர்புபடுத்தி அரசாங்க தரப்பினர் பிரசாரங்களை மேற்கொண்டுவருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.