இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியா மீட்பு அணிகளையும் உதவிப் பொருட்களையும் அனுப்பிவைத்துள்ளது.
இந்தியக் கடற்படையின் கப்பல்களான, ஐஎன்எஸ் சுனைனா மற்றும் ஐஎன்எஸ் சுட்லேஜ் ஆகிய கப்பல்களிலும் இந்திய விமானப்படையின் சி-17 போக்குவரத்து விமானத்திலும் இந்தியா உதவிப் பொருட்களையும் மீட்பு அணிகளையும் அனுப்பியுள்ளது.
இரண்டு கப்பல்களும் 30 தொடக்கம் 40 தொன் வரையான உதவிப்பொருட்களுடன் கொச்சியிலிருந்து இன்று காலை வந்தடைந்துள்ளன.
இதில், கூடாரங்கள், குடிநீர், மருந்துப் பொருட்கள், உடுபுடவைகள் மற்றும் அவசரகாலத் தேவைக்கான பொருட்கள் அனைத்தும் அடங்கியுள்ளன.
அத்துடன், மீட்புப் படையணிகளுக்கான படகுகள், சுழியோடிகள் மற்றும் வெளியிணைப்பு இயந்திரங்களும் இதில் அடங்கியுள்ளன.
இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட உதவிக் கோரிக்கையை அடுத்து, வியாழக்கிழமை இரவு இந்த உதவிப் பொருட்களை அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 6 மணிநேரங்களில் இரண்டு கப்பல்களும் தயார்படுத்தப்பட்டன என்று இந்தியக் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன், மேலும் அவசரகால நிலமை ஏற்படும் சந்தர்ப்பத்தில் அனுப்புவதற்காக கொச்சியில், இந்தியக் கடற்படையின் இரண்டு டோனியர் விமானங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசின் கோரிக்கைக்கமைய, கடந்த வெள்ளிக்கிழமை இந்திய உள்துறை அமைச்சகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கேற்ப, விமானம் மூலம் அவசர உதவிப் பொருட்களை அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டது.
இந்திய விமானப்படையின் கனரக போக்குவரத்து விமானமான சி-17 இல் அவசரமாக 60தொன் உதவிப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
புதுடில்லி பாலம் விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை மற்றும் தேசிய அனர்த்த மீட்புப்படை ஆகியவற்றின் அதிகாரிகளும் கொழும்பை வந்தடைந்தனர்.
சென்னையில் தங்கிச் சென்ற இந்த விமானத்தில், மருத்துவ உதவிகள், கூடாரங்கள், தார்ப்பாய்கள், அவசரகால விளக்குகள், நடமாடும் கழிப்பறைகள், ஆகியனவும் ஏற்றிச் செல்லப்பட்டன.
மேலதிக உதவிகள் தேவைப்படுமிடத்து அனுப்பிவைப்பதற்காக இலங்கையில் இருக்கும் இந்தியத் தூதரகத்துடன் வெளிவிவகார அமைச்சு தொடர்புகொண்டுவருகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.