இறுதிச் சடங்கு செய்யப்பட்ட சடலம் வைத்தியசாலையில் ஒப்படைப்பு

dead-footஇறுதிச் சடங்குகள் செய்யப்பட்ட சடலமொன்று, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம், தொண்டமனாறு பகுதியில் நேற்று திங்கட்கிழமை (21) இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கே.கஜநிதிபாலனின் உத்தரவிற்கமையே இந்த சடலம், யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

தொண்டமனாறு, கொட்டியாங்காட்டுப் பகுதியினைச் சேர்ந்த துரைராசா சின்னராசா (வயது 55) என்பவர் நேற்று திங்கட்கிழமை (21) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

உயர்குருதி அமுக்க நோய் அவருக்கு இருந்த காரணத்தினால், அதனாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என நினைத்த உறவினர்கள், அவருடைய சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைக்காமல் இறுதிச் சடங்குக் கிரியைகளை நேற்று (21) அவரது வீட்டில் நடத்தியுள்ளனர்.

இதன்போது, சடலத்தினைக் குளிப்பாட்டுகையில் சடலத்தின் முதுகில் காயங்கள் இருந்ததுடன், மர்மஉறுப்பு றப்பர் நூலினால் கட்டப்பட்டு இருந்ததுமையும் தெரியவந்தது. இதனையடுத்து, அவரது மரணத்தில் சந்தேகம் கொண்ட உறவினர்கள், வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு இது தொடர்பில் தகவல் வழங்கினர்.

இந்நிலையில், பருத்தித்துறை நீதவானுடன் சம்பவ இடத்துக்கு வருகை தந்த வல்வெட்டித்துறைப் பொலிஸார் நீதவானின் உத்தரவிற்கமைய சடலத்தினை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக ஒப்படைத்தனர்.