இராணுவ முகாம் அமைக்க காணி வழங்கினார் பிரதேச செயலர்!

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3 ஆம் பிட்டி கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதிக்கு அருகில் இராணுவ முகாம் அமைப்பதற்கான காணியினை மாந்தை மேற்கு பிரதேச செயலர் வழங்கியுள்ளார்.

குறித்த காணி இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட நிலையில் நேற்று நில அளவையாளர்கள் அப்பகுதிக்கு வந்து நில அளவீடு செய்து எல்லைக்கல் பதித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

பிரதேச செயலரின் இச்செயலால் ஆத்திரமடைந்த மக்கள், பிரதேச செயலரின் இந்தத் தான்தோன்றித்தனமான செயலுக்கு தமது கண்டனத்தைத் தெரிவித்ததுடன், ஏற்கனவே மூன்றாம் பிட்டியில் 3 இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இது நான்காவது முகாம் அமைப்பதற்கான இடம் எனவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் நாம் என்ன பயங்கரவாதிகளா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் அப்பகுதியைச் சென்று பார்வையிட்டுள்ள வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனிடம் தாம் பல தேவைகளுக்கு காணிகளைக் கோரியபோதும் பிரதேச செயலர் எந்தப் பதிலும் வழங்கவில்லையெனவும், இப்போது இராணுவமுகாமுக்கு காணி வழங்கியுள்ளதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், எமது பிரதேசத்தில் தொடர்ந்து இராணுவ முகாமுக்காக காணிகள் அபகரிக்கப்பட்டு வருவதை வடக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவருமாறு குணசீலனிடம் தெரிவித்த மக்கள் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதால் தாம் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

Related Posts