இராணுவ பிரசன்னத்துடன் வடக்கில் தேர்தல் நடத்தினால் பாதிப்பு ஏற்படும்; தேர்தல் கண்காணிப்பாளர்கள் அச்சம்

vote-box1[1] (1)வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னம் இருப்பதால் வடமாகாண சபைத் தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடும் என தேர்தல் கண்காணிப்பாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

வடக்கில் பொதுமக்கள் செல்லமுடியாத இடங்கள் இன்றும் பல உள்ளன. அதனால் அங்கு தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளமுடியாது. இந்த நிலையில் பொதுமக்கள் ஒன்றுக்கூடுவது போன்ற விடயங்கள் அதிகரித்த இராணுவ பிரசன்னத்துக்கு மத்தியில் எவ்வாறு சாத்தியமாகும் என கபே அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண சபைத் தேர்தலின்போது அரசியல் சுதந்திரம், ஊடக சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் என்பன அவசியமானது. எனினும் வடக்கில் இன்று பொதுமக்கள் செல்லமுடியாத பல இடங்கள் உள்ளன. அவ்வாறு இருக்கும் போது எவ்வாறு அங்கு தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள முடியும்.

அது மட்டுமல்ல இந்தநிலையில் பொதுமக்கள் ஒன்றுக்கூடுவது போன்ற விடயங்கள் அதிக இராணுவ பிரசன்னத்துக்கு மத்தியில் எவ்வாறு சாத்தியமாகும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராட்சி தெரிவிக்கையில்,

வடக்கில் உள்ள பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு சவால் விடுக்க முடியாது.

இருப்பினும் அதிக இராணுவ பிரசன்னம் என்பது வாக்காளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் . இதனைக் கடந்த காலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் இருந்து அறியமுடிகின்றது.

எனவே இவ்வாறான செயற்பாடுகளால் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களிலும் மக்கள் மனதில் ஒரு அச்ச உணர்வையினையே உருவாக்கும்.

அத்துடன் வடக்கில் 70 வீதமான வாக்காளர்கள் அடையாள அட்டைகள் இன்றி உள்ளனர். எனவே அவர்கள் வாக்களிப்பதில் பாரிய சிரமங்கள் ஏற்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பரில் வடமாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.