Ad Widget

இராணுவ அனுசரணைச் சக்திகளால் நெடுந்தீவு மக்கள் வெளியேற்றம் – முதலமைச்சர் சி.வி

இலங்கை இராணுவமும் அதனுடன் சேர்ந்த இராணுவ அனுசரணைச் சக்திகளும் நெடுந்தீவை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து, இங்கு வசித்து வந்த பெரும்பாலான மக்கள் யாழ்ப்பாணத்தின் பிற பிரதேசங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்றுவிட்டார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

north-naduntheve-delft

நெடுந்தீவு மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

‘பொருளாதார வசதிகள் அருகிய ஒரு நிலையிலேயே, பெரும்பாலாக எங்கள் தமிழ் மீனவ சமூக மக்கள் பலத்த சிரமங்களிடையே வாழ்ந்து வருவதாக அறிந்து கொண்டேன். அடிப்படை வசதிகள் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படவில்லை. கிறிஸ்மஸ் தாத்தா வருவது போல் சில பல பரிசுப் பொருட்களை வாகனங்களில் சுமந்து கொண்டுவந்துள்ளோம்.

வடமாகாண சபையானது உங்கள் ஒவ்வொருவருக்கும் உரிய சபை. அதில் அரசு நடத்தும் கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு கிடையாது. எதிர்க்கட்சியினர் வென்ற இடங்களையும் நாங்கள் ஒரே மாதிரியாகத்தான் அபிவிருத்தி செய்து வருகின்றோம். ஏனெனில், எதிர்க்கட்சியினரும் எங்கள் சொந்த உறவுகள்தான். கட்சியைக் காட்டி கல்நெஞ்சர்களாக மாறுவதற்கு இடமளிக்கக்கூடாது.

முஸ்லிம் மக்கள், மலையக மக்களிடையே நான் ஒன்றை அவதானித்துள்ளேன். ஒரு சகோதரர் ஒரு கட்சியிலும் மற்றவர் இன்னொரு கட்சியிலும் இருப்பார்கள். யார் வந்தாலும் சகோதரர்கள் தங்கள் குடும்பங்களைப் பார்த்துக் கொள்வார்கள். இந்த நிலை மாற வேண்டும். நெடுந்தீவு மிக அழகான தீவு. பல வளங்களை கொண்ட தீவு. துரதிஷ்டவசமாக சனிபகவானின் திருஷ்டி சிலகாலம் உங்களைப் பீடித்திருந்தது. சனி மாற்றத்தின் பின் விடியத் தொடங்குவதை நாம் அவதானிக்கலாம்.

இந்தத் தீவானது பலமருந்து மூலிகைகள் செழித்து வளரும் மாமலைவனம் என்று மன்னன் செகராசசேகரன் காலத்தில் அழைக்கப்பட்டது. இங்கு அன்னியர் ஆட்சிக்கு முன்னர் ஆண்ட வெடியரசனின் கோட்டை இருப்பதாக அறிகின்றேன். அப்படிப்பட்ட சரித்திரப் பிரசித்தி பெற்ற கோட்டையை எமது சுற்றுலா அமைச்சு ஏற்று, புனர் நிர்மாணப் பணிகளில் ஈடுபட சட்டத்தில் இடமிருக்கின்றதா? என்பதை எமது சுற்றாடல் அமைச்சின் அனுசரணைப் பிரதிநிதி பா.கஜதீபன் ஆராய்ந்து பார்ப்பார் என்று நம்புகின்றேன்.

சில விடயங்கள் எங்கள் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என்ற காரணத்தினாலேயே இவ்வாறு கூறினேன். இதனை விட மேலும் நெடுந்தீவுக் கோட்டை, மாவலித்துறை போன்றவையும் பாதுகாத்துப் பயன்படுத்தப்பட வேண்டியவை. மாவலித்துறை முகத்தில் வெளிச்சவீடு இன்றும் இரவில் ஒளிவீசிப் பயன் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

சுற்றுலா என்று கூறும் போது நினைவுக்கு வருவது கட்டைக் குதிரைகள். ஒல்லாந்தர் காலத்தில் இந்த கட்டை குதிரைகளும் கோவேறு கழுதைகளும் இங்கு கப்பல்களில் வருவிக்கப்பட்டன என்ற கூறுகின்றார்கள். குதிரைகளை தீவுக்கு வெளியே கொண்டு செல்வதற்கு தடையுண்டு. அண்மையில் அதைமீறி கடத்திச் சென்றவர்கள் சிலர் இன்று பலவித சிரமங்களுக்கு ஆளாகியிருக்கின்றார்கள்.

இப்பேர்ப்பட்ட விலங்குகளைப் பார்த்துப் பராமரித்து வருவது உங்கள் கடப்பாடாகும். உங்கள் தீவை நினைவுபடுத்தும் அளவுக்கு அவை இன்று பிரசித்தி பெற்று விட்டன என்பதை மறவாதீர்கள்.
எங்களுக்கு வாழ்வாதாரங்கள் கிடைக்காத நிலையில் அவற்றை எப்படி பராமரிக்கலாம் என்று கூறாதீர்கள். அவை நாளடைவில் சுற்றுலா ஊடாகப் பெரும் பணம் பெற்றுத்தரப்போகும் இறைவன் படைப்புக்கள். அவற்றை அழியாது பாதுகாத்தல் உங்கள் கடப்பாடாகும்.

இங்குள்ள பெருக்குமரமும் வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. இம்மரத்தில் உள்ள துளை வழியாக உள்ளே சென்றால் அங்கே குகை ஒன்று வருகின்றது. இந்தக் குகைக்குள் ஒரு சாதாரண குடும்ப அங்கத்தவர்கள் அங்கு நிற்கக்கூடிய இடவசதி உள்ளது. இம்மரமும் சுற்றுலாத்துறையினரால் பரிசீலித்துப் பார்த்து பாதுகாப்புக் கொடுத்து பராமரிக்கப் படவேண்டிய ஒரு விருட்சமாகும்.

டச்சுக் காலத்து குதிரை லாயங்களும் பாரிய காலடி போன்ற இயற்கையான அமைப்பும் மக்கள் பார்வைக்காக விடக்கூடிய இடங்கள். இவை புனர்நிர்மாணம் செய்து மக்கள் பார்வைக்காக விடப்படவேண்டும் என்று கருதுகின்றேன்.

வடமாகாணம் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டிய காலம் கனிந்து வருகின்றது. எமது சுற்றுச் சூழலை நாங்கள் வித்தியாசமான ஒரு சுற்றாடலுக்கு உட்படுத்த வேண்டும். பாரிய சுற்றுலா ஹொட்டேல்களை நிர்மாணிப்பதிலும் பார்க்க ‘கபானா’ போன்ற குடிசைகளை எமது பாரம்பரியத்துக்கும் சுற்றாடலுக்கும், தட்ப வெட்ப நிலைக்கும் ஏற்றவாறு நவீன உள்ளக வசதிகளுடன் கட்டுவதே சிறந்தது.

அதற்குரிய கட்டுமானங்கள், கலவைகள் போன்றவை உள்ளூரில் இருந்தே பெற வழிவகுக்க வேண்டும். உணவு – உறங்கு வசதிகள் கொண்ட விடுதிகள் கட்ட பலரும் முன்வருவார்கள். ஆனால் கட்டும் பணிகளிலும் அவற்றை நடத்தும் பணிகளிலும் எமது உள்ளூர் மக்களே அல்லது வடமாகாண மக்களே ஈடுபட வேண்டும்.

வெளியில் இருந்து வருபவர்கள் எங்கள் சுற்றுச் சூழலைப் பாவித்து விட்டுப் பெருவாரியான வருமானங்களை வெளியில் எடுத்துச் செல்லவிடக்கூடாது. வடக்கு கிழக்கு இப்பொழுது திறக்கப்பட்டுவிட்டது. கிடைத்ததைச் சுருட்டுவோம் என்ற எண்ணத்தில் பலர் வருவார்கள். எமது சபையுடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள் என்று கூறிவைக்கின்றேன். மக்கள் மத்தியில் இராணுவத்துக்கு இடமில்லை என்பது எனது கருத்து’ என முதலமைச்சர் கூறினார்.

Related Posts