ஐக்கிய இராச்சியத்தின் ஆசிய பசுப்பிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட்டுக்கும், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம் பெற்றுள்ளது.
இதன் போது வடக்கு மாகாணத்தின் தற்போதய நிலைமைகள் நல்லிணக்கத்திற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆளுநரிடம் மார்க் பீல்ட் தலைமையிலான தூதுக்குழுவினர் கேட்டறிந்து கொண்டனர்.
வடக்கில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் வடக்கு இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும் எனவும் அதற்கான முயற்சிகளுக்கு உதவியளிக்க வேண்டும் எனவும் ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு மூவின மாணவர்களும் கல்வி கற்க கூடிய பாடசாலை ஒன்றை உருவாக்கும் தனது முயற்சி தொடர்பில் வடமாகாண ஆளுநர் இந்த குழுவிடம் எடுத்து கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த அவர்கள் அவ்வாறு உருவாக்கப்படும் பாடசாலையில் ஆங்கில கற்கையினை ஊக்குவிப்பதற்கு உதவி புரிவதாக உறுதியளித்துள்ளனர்.
மேலும் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை தற்போதய அரசு விடுவித்து வருவதாகவும் படிப்படியாக அதனை விடுவிப்பதற்கான முன்னகர்வுகள் இடம்பெறுவதாகவும் வெகு விரைவில் இந்த வேலைத்திட்டம் நிறைவடையும் என ஆளுநர் பிரித்தானிய குழுவிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ், நல்லிணக்கத்திற்கான ஆலோசகர் போல் கிரீன் ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.