இராணுவம் நிலைகொண்டிருப்பதே முக்கிய பிரச்சினை – முதலமைச்சர்

vicknewaran-tnaவடக்கு மக்களின் முக்கியமான பிரச்சினை இராணுவம் நிலைகொண்டிருப்பது என்பதுடன், இதனாலேயே ஏனைய பிரச்சினைகளும் தோற்றுவிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதியிடம் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதி சலோகா பெயானி, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை அவரது வாசஸ்தலத்திலும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை யாழ். மாவட்டச் செயலகத்திலும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது வாசஸ்தலத்திலும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதியிடம் கூறியதாகவும் வடமாகாண முதலமைச்சர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதி சலோகா பெயானியுடனான சந்திப்புக் குறித்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்,

‘வலி. வடக்கில் 6,000 இற்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றமை தொடர்பிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் எவ்வளவு, எவ்வளவு ஏக்கர் காணிகளை ஆக்கிரமித்து இராணுவம் பயன்படுத்தி வருகின்றது என்பது தொடர்பிலும் எடுத்துக் கூறியிருந்தேன்.

இப்பொழுது நடைபெறுகின்ற விடயங்களைப் பார்த்தால் இன்னமும் 100 வருடங்களுக்கு இராணுவத்தினர் வடக்கில் தொடர்ந்திருப்பார்கள் போன்றே தெரிகின்றது. இதனுடைய உண்மையான அர்த்தம் என்னவெனில் தெற்கிலிருந்து மக்களைக் கொண்டு வந்து இராணுவத்துடன் சேர்த்து குடியமர்த்துவதாகும்.

கிழக்கில் இடம்பெற்றதைப் போல வடக்கிலும் இராணுவக் குடியேற்றங்கள் மேற்கொள்வதற்கு இராணுவம் முயற்சிக்கின்றது. இதனை எங்களால் தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும் சர்வதேசத்தின் கவனத்தில் கொண்டு வந்து அதற்கான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும், இங்குள்ள மக்களின் வாழ்வாதார நிலைமைகள் பாதிப்படைந்துள்ள நிலையில், வறுமை நிலையைப் போக்க மக்கள் கடன்கள் வாங்கி தங்கள் வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றனர்.

வடமாகாணத்தில் தொழில் வாய்ப்புக்களை இராணுவம் ஆக்கிரமித்து தொழில் செய்து வருகின்றது. குறிப்பாக விவசாயம், மீன்பிடி, வர்த்தகம் உள்ளிட்ட தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் மக்கள் வாழ்வாதார ரீதியாக பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என சிறப்புப் பிரதிநிதிக்கு எடுத்துக்கூறினேன்’ என்றார்.