இராணுவமும் கருணா குழுவும் மருமகனை இழுத்துச் சென்றனர்

missing-peopleஇராணுவத்தினரிடம் சரணடைந்த எனது மருமகனின் சேட்டைப் பிடித்து இராணுவத்தினரும் கருணா குழுவினரும் இழுத்து சென்றதாகவும் அப்போது எங்களையும் அவரோடு கொண்டு செல்லுங்கள் என எனது மகள் கதறி அழுதார் என அதனை நேரில் கண்ட உறவினர் ஒருவர் தெரிவித்ததாக விடுதலை புலிகளின் அமைப்பின் அரசியல் துறையில் அங்கம் வகித்த உறுப்பினரான சின்னத்தம்பி பரமேஸ்வரனின் மாமியார் இளங்கோதை நேற்று சாட்சியமளித்தார்.

காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்கும் நடவடிக்கை கடந்த வெள்ளிக்கிழமை (14) முதல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

வெள்ளிக்கிழமை (14) கோப்பாய் பிரதேச செயலகத்திலும், சனிக்கிழமை (15) சாவகச்சேரி பிரதேச செயலகத்திலும் நடைபெற்ற இந்த சாட்சியமளிக்கும் நடவடிக்கை, இன்று (16) யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கதறி அழுதவண்ணம் கூறினர்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ‘எனது மகளான பரமேஸ்வரன் சசிகலா அவரது கணவர் மற்றும் குழந்தைகளான பிரதீபன், பிரியாஜினி, துரையழகன் ஆகியோர் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள்.

சரணடைந்த சில நாட்களின் பின்னர் ஓமந்தைப் பகுதியில் எனது மருமகனை இராணுவத்தினரும் கருணா குழுவினரும் சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்றதாகவும் அப்போது பிள்ளைகளுடன் நின்ற எனது மகள் ‘எங்களையும் அவரோடு கொண்டு செல்லுங்கள்’ என கதறி அழுததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த உறவினர் ஒருவர் எனக்கு சொன்னார்’ என்று இளங்கோதை சாட்சியமளித்தார்.

‘மேற்படி சம்பவத்தை அடுத்து என்னுடைய மகளின் குடும்பத்தைப் பற்றிய தகவலே இல்லை. நான் ஒரு குடும்பத்தையே இழந்து நிற்கின்றேன். என்னுடைய பேரப்பிள்ளைகள் முகாமில் இருந்தால் அவர்களையாவது மீட்டுத்தாருங்கள்’ கதறி அழுதவாறு ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் அவர் சாட்சிமளித்தார்.