இராணுவத்தின் வசம் உள்ள காணிகளை பயிர்செய்கைக்காக தருமாறு கோரிக்கை

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு பிரதேசத்தில் இராணுவ தேவைக்காக எடுக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள வயல் காணிகளில் எதிர்வரும் மாதங்களில் காலபோகச் செய்கையை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்று கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.

mullaiththevu--keppapilavu

எனினும் அதற்குரிய அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாகவும், இனியும் அவ்வாறான அனுமதி வழக்குவதற்குரிய காணிகள் எதுவும் இராணுவத்திடம் இல்லை என்றும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய ​தெரிவித்துள்ளார்.

கேப்பாப்பிலவு கிராமமும் அதனை அண்மித்து, விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்டிருந்த விமான ஓடுபாதை பிரதேசமும் இராணுவத்தின் பயன்பாட்டிற்காக எடுக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பகுதியிலேயே முல்லைத்தீவு மாவட்டத்தின் இராணுவ கட்டளைத் தளபதியின் அலுவலகமும் இராணுவ முகாமும் செயற்பட்டு வருகின்றது.

மக்களின் வேண்டுகோளையேற்று, படிப்படியாக சுமார் 500 ஏக்கர் விவசாய காணிகளில் விவசாயம் செய்வதற்கு இராணுவம் அனுமதி வழங்கியிருப்பதாக கேப்பாப்பிலவு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் இராசையா பரமேஸ்வரன் கூறுகின்றார்.

ஆயினும் இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்ட இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, கேப்பாப்பிலவு பகுதியைச் சேர்ந்த மக்களுக்குரிய சுமார் 240 ஏக்கர் நிரந்தர விவசாய காணிகளில், அவர்கள் விவசாயம் செய்வதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுவிட்டது என கூறினார்.

கேப்பாப்பிலவு பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நிரந்தரமாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட விவசாய காணிகள் எதுவும் இராணுவத்தினர் வசம் இல்லை என்று அவர் கூறுகிறார்.

முல்லைத்தீவு பிரதேசத்தில் விடுதலைப்புலிகள் அமைத்திருந்த இராணுவ ஓடுபாதையே அந்தப் பிரதேசத்து பொதுமக்களின் எதிர்கால பயன்பாட்டிற்கென அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கின்றது, அங்கு காணிப்பிரச்சினைக்கு சுமுகமான முடிவு காணப்பட்டிருக்கின்றது, வேறு எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்று இராணுவப் பேச்சாளர் கூறுகிறார்.

Recommended For You

About the Author: Editor