இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள தனியார் காணிகளின் விபரங்களை விஜயகலாவிடம் கோரினார் ஜனாதிபதி!

வடக்கில் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை வெளியேற்றுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தனியார் காணிகளில் இராணுவத்தினர் தங்கியிருக்கும் இடங்கள் குறித்த விபரங்களைத் தன்னிடம் தருமாறு சிறுவர் விவகார அமைச்சர் விஜயகலாவிடம் சிறீலங்கா அதிபர் கோரியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை புனரமைப்புச் செய்யப்பட்ட துரையப்பா விளையாட்டரங்குத் திறப்புவிழாவுக்கு அதிபர் மைத்திரிபால சிறிசேன வருகை தந்திருந்தபோது சிறுவர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனியார் காணிகளில் தங்கியிருக்கும் இராணுவத்தினர் தொடர்பாக வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவிக்கும்போது,

வடக்கில் தனியார் காணிகளில் நீண்டகாலமாக இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.

இதனால் பெருமளவிலான பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்கவேண்டியுள்ளது.

பல தடவைகள் இவ்விடயம் தொடர்பாக சுட்டிக்காட்டியபோதும் முன்னைய ஆட்சியாளர்கள் இதனைக் கருத்திலெடுக்கவில்லை.

இவ்வாறான நிலையில் தற்போது இப்பிரச்சனையை சிறீலங்கா அதிபரின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளேன்.

இவ்வாறான விடயங்களை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு சிறீலங்கா அதிபர் கோரியுள்ளார். அந்த விபரங்கள் விரைவில் கையளிக்கப்படும்.

விரைவில் இதற்கு நிரந்தரமான தீர்வொன்றை வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன்.

அத்துடன் தற்போது வர்த்தமானி அறிவித்தலுடன் தனியார் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. அக்காணிகளையும் விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Related Posts