இராணுவச் சிப்பாயின் கையைக் கடித்தவர் கைது

arrestஇராணுவச் சிப்பாய் ஒருவரின் கையினைக் கடித்த, நவக்கிரி நிலாவரையடியினைச் சேர்ந்த நபர் ஒருவர் வியாழக்கிழமை (29) இரவு கைதுசெய்யப்பட்டதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தினைச் சேர்ந்த கணேஸ் ஸ்ரீஸ்கந்தராசா (32) என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் மது அருந்திய நிலையில் வியாழக்கிழமை(29) தனது மனைவியுடன் சண்டையிட்டதுடன் தற்கொலை செய்யப்போவதாகக்கூறி தனது கழுத்தில் கத்தியினை வைத்து குடும்பத்தினரை மிரட்டிக் கொண்டிருந்துள்ளார்.

இதனால் மனைவி கூக்குரலிடவே, அவ்வீதி வழியாக துவிச்சக்கரவண்டிகளில் ரோந்து சென்றுகொண்டிருந்த இராணுவத்தினர், வீட்டிற்குள் வந்து குறித்த நபரின் கையிலிருந்து கத்தியினைப் பறித்தனர்.

இதன்போது, குறித்தநபர் இராணுவ சிப்பாய் ஒருவரின் கையினைப் பலமாகக் கடித்துள்ளார். இதனால் காயமடைந்த இராணுவ சிப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் மேற்படி நபரின் குடும்பத்தினரால் அச்சுவேலிப் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபரைக் கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts