இரண்டு மணித்தியாலத்தில் பரீட்சை பெறுபேறுகள்!

Education-Newsகல்விப் பொதுத் தராதர சாதாரண தரம், உயர்தரம், பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பரீட்சைகளுக்குமான பெறுபேறுகளை இரண்டு மணித்தியாலங்களில் பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

1992 ஆம் ஆண்டின் பின்னர் நடைபெற்ற சகல பரீட்சைகளின் பெறுபேறுகளையும் இரண்டு மணித்தியாலங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

பரீட்சைப் பெறுபேறுகளை ஒருநாள் சேவையின் ஊடாக பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பரீட்சை இலக்கம், பரீட்சை நிலையம் மற்றும் பரீட்சை எழுதப்பட்ட வருடம் குறித்து சரியான தகவல்கள் இல்லாத பட்சத்தில், பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதற்கு இரண்டு நாட்கள் தேவைப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாட்டிலிருந்தும் இணையத்தளம் ஊடாக பணம் செலுத்தி பரீட்சைப் பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் இருந்து நாளொன்றிற்கு சுமார் 700 பேரிடமிருந்து விண்ணப்பபடிவங்கள் கிடைத்து வருவதாக அரசாங்க தகவல் திணைக்கள இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.