Ad Widget

‘இரணைமடு குடிநீர்த் திட்டம்” என்ற பெயரில் தமிழ் இனச் சுத்திகரிப்பு – சிறிதரன்

Sritharanகிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் விநியோகத் திட்டம் என்ற போர்வையில் தமிழ் இனச்சுத்திகரிப்பு வேலைத்திட்டம் இடம்பெறுகின்றது என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘இரணைமடுக் குளத்தில் மேலதிகமாக நீர் இருப்பின் அதைக் கொண்டு செல்வதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இதற்கிடையில் மகாவலித் திட்டம் தொடர்பாக பேசப்படுகின்றது. மகாவலி கங்கை நீரினை இரணைமடு குளத்துடன் இணைத்து யாழிற்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்வதற்கான முயற்சியும் இடம்பெறுகிறது. மகாவலித் திட்டமானது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. மகாவலி இரணைமடுவுடன் இணைந்து கொண்டால் இது மத்திய அரசின் அதிகார சபைக்குட்பட்டுவிடும். பின்பே வடமாகாண சபை இதில் தலையிட முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

இதன்மூலம் தமிழ் மக்களை ஓரம் கட்டி இனச்சுத்திகரிப்பு இடம்பெறும். இதற்கு நாம் இடமளிக்கப் போகிறோமா? என்பது தான் கேள்வி. இதற்கிடையில் யாழ்.நகருக்கு ஈடான நகரொன்றை மாங்குளத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. இங்கு குடியமர்த்தப்படவுள்ள மக்களுக்கான குடிநீர் இரணைமடுவில் இருந்து வழங்கப்படவுள்ளதாம். அப்படியானால் மாங்குளத்தில் எந்த மக்கள் குடியமர்த்தப்படவுள்ளனர். என்பதும் கேள்வி குறியாகவுள்ளது.

யாழிலுள்ள எந்த தரப்பினரும் தமக்கு நீர் தேவை என்று கேட்பதை நான் அறியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக கிளிநொச்சி வன்னிப் பிரதேசம் என்றோ, யாழ்ப்பாணத்தினைவிட்டு வேறு பிரதேசமென்றோ யாரும் பிரித்து பார்க்கக்கூடாது. யாழ்.மக்களில் பலர் கிளிநொச்சியில் வசிக்கின்றனர். கிளிநொச்சியிலுள்ள 80 வீதமான வயல் நிலங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்கு சொந்தமாக உள்ளது. ஆகவே கிளிநொச்சி யாழ்ப்பாணத்திற்கு உட்பட்டதாகவே உள்ளது.

யாழ்.நன்னீர் சுத்திரிகரிப்பு நடவடிக்கையினை சரியாக செய்தால் யாழ்ப்பாணத்து குடிநீர் பிரச்சினையினை நிவர்த்தி செய்யலாம்.

தொண்டமனாறு, சுண்டிக்குளம் ஆகிய பகுதிகளின் நன்னீர் தேக்கங்களினை சரியான முறையில் பேணினால் யாழிற்கான குடிநீர் பிரச்சினை நிவர்த்தி செய்யப்படும். மண்கும்பான் பகுதியில் நீரினை போத்தலில் அடைத்து விற்பதற்கு ஒருவர் தற்போது அனுமதி பெற்றுள்ளார்.

இவ்வாறான பிரச்சினைகளை பற்றி கதைப்பவர்கள் இல்லை. இது போன்ற பல திட்டங்கள் சரியாக நடைமுறைப்படுத்தினால் யாழிற்கான குடிநீர் பிரச்சினை நிவர்த்தி செய்யப்படும். இதைவிடுத்து இரணைமடு குளத்திலிருந்து நீர் கொண்டு வரப்படுவதன் மூலம் தான் யாழிற்கான குடிநீர் பிரச்சினை தீரும் என்பதில் அர்த்தம் இல்லை.

நிலாவரை நீர் தொடர்பான திட்டங்களினை நடைமுறைப்படுத்தலாம். இது தொடர்பில் கதைப்பவர்கள் யாரும் இல்லை. ஆனால் கிளிநொச்சியில் பாரிய நீர்ப்பிரச்சினையுள்ளது. பூநகரியில் நீர்ப்பிரச்சினை பாரிய அளவில் உள்ளது. கல்லாறு போன்ற பிரதேசங்களில் இப்போதும் வாகன நீர்த் தாங்கியின் மூலம் நீர் வழங்கப்படுகின்றது. இவ்வாறான பிரச்சினைகள் இருக்கையில் யாழிற்கு எவ்வாறு நீர் கொண்டு வருவது?

2009 ஆண்டில் இடம்பெயர்வின் போது இரணைமடுக்குளத்தில் 17 அடி நீர் காணப்பட்டது. தற்போது 15 அடி 4 அங்குலம் நீர் உள்ளது. இது நெற்செய்கைக்குகூட போதாமையாக இருக்கின்றது.

கிளிநொச்சி விவசாயிகள் எவரும் நீரைத் தரமாட்டோம் என்று கூறவில்லை. தமது விவசாய நடவடிக்கைகளினை அதிகரித்துவிட்டு நீரினை யாழிற்கு கொண்டு செல்லுங்கள் என்றுதான் கூறுகின்றார்கள். சிறுபோகத்தில் ஆகக்கூடியது 8 ஆயிரம் ஏக்கர் கூட விவசாயம் செய்யவில்லை.

அடிப்படைப் பிரச்சினை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். முதலில் கிளிநொச்சி பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் குழுக்கள் தமது சுகபோக வாழ்விற்காக இதனை செய்வதில் அதிகூடிய அக்கறை காட்டுகின்றனர். தமிழ் மக்களுக்கு ஆசை காட்டுகின்றனர். தமிழ் மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினையினை கொடுத்து இனச்சுத்திகரிப்பு வேலைகளினை மேற்கொள்வதில் சிலர் மும்முரமாக செயற்படுகின்றனர். இதனை மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

வலி.வடக்கில் 10 ஆயிரம் பரப்புக் காணியில் சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்படவுள்ளன.

காங்கேசன்துறை, மயிலிட்டி பகுதிகளில் 5 ஆயிரம் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் சூழ்ச்சி செய்து வருகின்றது.
அங்குள்ள 24 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய 1,02,200 பரப்புக்காணி சுவீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதில் 50 ஆயிரம் பரப்புக் காணியினை சிங்கள மக்களுக்கு ஒதுக்கியுள்ளனர்.

ஒரு குடும்பத்திற்கு 2 பரப்பு காணி என்ற அடிப்படையில் காணிகள் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் முதற்கட்டமாக எதிர்வரும் டிசெம்பர் மாதம் யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறைக்கு புகையிரதச் சேவை சென்றடையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்தருணம் 10 ஆயிரம் பரப்புக் காணிகளில் சிங்கள குடியேற்றம் செய்வதற்கான அனைத்து வேலைப்பாடுகளும் இடம்பெறுகின்றன.

இவ்வாறான சிங்கள குடியேற்றம் செய்யப்படும் குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகத் திட்டம் மும்முரப்படுத்தப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

எமது இடங்களில் சிங்கள குடியேற்றங்களும், எமது இடங்களை பறிப்பதும் மிக துல்லியமாக நடைபெற்று வருகின்றது.

பல்தேசிய கம்பனிகளின் வருகைகள், சிங்கள குடியேற்றங்கள் போன்றவற்றினை மேற்கொள்வதற்கான ஒரு திட்டம் தான் இரணைமடு திட்டம், இங்குள்ள மக்களை ஏமாற்றி இராணுவ முகாம்களுக்கு தண்ணீர் வழங்க தான் இந்த சூழ்ச்சி நடைபெறுகின்றது.

இதில் பல பிரதேசங்கள் சிங்கள மக்களுக்கு வழங்கப்படுதல் நியாயம் இல்லை. இரணைமடுவிற்கு தெற்குப் புறத்தில் 10 ஆயிரம் சிங்கள குடும்பங்களின் குடியேற்றங்கள், அதனைவிட நாவற்குழியில் 300 சிங்கள குடும்பங்களின் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அடுத்த பிரதேச சபை தேர்தலில் சாவகச்சேரி பிரதேச சபையில் சிங்கள உறுப்பினர் ஒருவர் இருப்பார். அதை யாராலும் தடுக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts