உலகளாவிய ரீதியில் உலக வானொலி தினம் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி அனைத்து உலக மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து உலகத்திலும் அனைத்து வகுப்பு ரீதியான மக்களும் அதிகமாக விரும்பிக் கேட்பது வானொலி ஆகும். உலக வானொலி நாள் என்பது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்கவே 2010 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட பிரேரணையை அடுத்து 2011 ஆம் ஆண்டிலிருந்து வானொலி நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி வானொலியைக் கண்டு பிடித்தவர். இவரே வானொலியின் தந்தை என அழைக்கப்படுபவராவார். கம்பியற்ற தகவல்தொடர்பு முறை, மற்றும் “மார்க்கோனி விதி” ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார் என்பது விசேட அம்சமாகும்.
நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், தொலைக்காட்சி, மொபைல், ஸ்மார்ட்போன், ஐபார்ட், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான் என்பது சுட்டிக்காட்டித்தக்க விடயமாகும்.