இன்னும் அதிக இராணுவத்தினர் வடக்கில் பணிபுரிய வேண்டும்; ஹத்துருசிங்க கருத்து

Mahintha-hathturusinga-armyபுனர்வாழ்வு பெற்றுக் கொள்ளாமல் மக்களோடு மக்களாக வாழும் 4 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர்ச்சிகரமான அரசியல் நடவடிக்கை மூலம் உசுப்பேற்றி வருகிறது.

இதனால் வடக்கில் இராணுவ முகாம்களை மூடுவதை விடுத்து இன்னும் அதிக இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்த வேண்டும் என்று பாதுகாப்புச் செயலரிடம் கோரவுள்ளேன்”

என்று தெரிவித்தார் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துரு சிங்க. ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:

தற்போது நடைபெறும் சம்பவங்களையும் கிடைக்கும் தகவல்களையும் வைத்துப் பார்க்கும் போது வடக்கில் இன்னும் அதிக படையினரை கடமையில் ஈடுபடுத்த வேண்டும் என்றே தோன்றுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் விக்னேஸ்வரன் தேர்தல் பரப்புரை மேடைகளில் பிரபாகரன் ஒரு பெரும் வீரன் அவரால் தான் தமிழினத்துக்கே பெருமை கிடைத்தது என்றும், அவர் எந்த இடத்தில் போராட்டத்தை விட்டாரோ அந்த இடத்தில் இருந்து தாங்கள் அதனை தொடரப் போவதாகவும் கூறியுள்ளார்.

புலிகளின் சித்தாந்தம் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது. தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆயுதப் போராட்டமே ஒரே வழி என்று அவர்கள் இன்னமும் நினைக்கிறார்கள்

இத்தகைய கருத்துக்களால் அச்சுறுத்தல் இன்னமும் பெரிய அளவில் இருந்து வருவது தெரிகின்றது. இந்த நிலைமையில் ராணுவத்தை குறைப்பதைவிடுத்து அதிக ராணுவத்தினரை அனுப்பும் படியும் புதிய முகாம்களை அமைக்கும் படியும் பாதுகாப்பு செயலாளரைக் கோருவது பற்றி ஆலோசித்து வருகின்றேன்.

கடந்த 25 வருட காலமாக இங்கு ஒரு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றதில்லை. அப்படியான ஒரு சந்தர்ப்பம் வழங்கும்போது இதைத்தான் அவர்கள் செய்ய முற்படுகிறார்கள்.

விக்னேஸ்வரனும் கூட்டமைப்பும் ராணுவத்தை வில்லன் போல காட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள். ஆனால் இந்த விக்னேஸ்வரன் தமது வாழ்நாளில் தமிழ் மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்?

என்பதே எனது கேள்வி. காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் புலி உறுப்பினர்களோ அவர்களின் உறவினர்களோ தமது வழக்குகளை விக்னேஸ்வரன் விசாரிப்பதை விரும்பியதில்லை.

ஏனெனில் அவர் இரக்கமே இல்லாமல் கடும் தண்டனை விதிப்பவர் என்று அவர் கருதப்பட்டார். இதே விக்னேஸ்வரன் தான் இப்போது தமிழ் மக்களின் இரட்சகர் என்று கூறிக்கொள்கிறார் என்றார்.