ஒருகால கட்டத்தில் இந்நாடு தவறான அரசியல் வழிநடத்தல்களினாலேயே இரத்தத்தில் மூழ்கடிக்கப்பட்டதாகவும், அக் கொடிய யுத்தத்திற்கு ஜனாதிபதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற உலக இரத்தான தினம் 2014 நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய உலக இரத்தான நிகழ்வில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடையும் அதேவேளை, இதனை ஏற்பாடு செய்த ஏற்பாடாளர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தானத்தில் சிறந்த தானமாக இரத்ததானம் கருதப்படுகின்றது. ஒரு காலகட்டத்தில் தவறான அரசியல் வழிநடத்தல்கள் காரணமாக இந்நாடு இரத்தத்தில் மூழ்கடிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு இந்நாட்டில் இடம்பெற்று வந்த கொடிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் முற்றுப்புள்ளி வைத்தார்.
சர்வதேச நாடுகள் உலக இரத்தான நிகழ்வை இலங்கையில் கடைப்பிடிக்க அங்கீகாரம் வழங்கியுள்ளமை சிறப்பம்சமாகும்.
எனவே, ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப எமது மக்கள் இவ்வாறானதொரு குருதிக் கொடையை வழங்குவதற்கு முன்வர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
நிகழ்வில் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி உரையாற்றும் போது, 2004 ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இத்தினம் ஏற்பாடு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இத்தினம் இவ்வாண்டு இலங்கையில் முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் 3,000 மேற்பட்ட தாய்மார்கள் பங்கெடுக்கவுள்ளனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களது நெறிப்படுத்தலிலும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரது ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடன் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் சுகாதாரத்துறை பல்வேறு வழிகளில் முன்னேற்றம் கண்டு வருகின்றது.
இவ்வாறான முன்னேற்ற மேம்பாட்டு செயற்பாடுகளுக்கு மாவட்ட மற்றும் மாகாண சுகாதாரத்துறைசார்ந்தோர் தமது முழுமையான பங்களிப்பினை வழங்கி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
தூய உதிரம் அண்னையாரை காக்கும் என்ற தொனிப்பொருளில் உலக இரத்தான தினம் கடைப்பிடிக்கப்படுகின்ற நிலையில் 11 வது சர்வதேச நினைவு தினம் எதிர்வரும் 15 ஆம் திகதி இலங்கையில் கடைப்பிடிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றய நிகழ்வில் முன்பதாக அமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோர் பிரதான வாயிலில் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டது.
தொடர்ந்து தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற இரத்ததானம் தொடர்பான விளக்கவுரையினை தேசிய இரத்தவங்கியின் ஆலோசகர் திருமதி செனவிரட்னவும் இத்தினத்தின் அவசியம் குறித்து குருதி மாற்றீட்டு சேவை விசேட வைத்திய நிபுணர் டாக்டர் குணரட்ன மற்றும் குருதிக்கொடையாளர்கள் சார்பில் திருமதி வத்சலாவும் உரைகளை நிகழ்த்தினர்.
இதில் யாழ்.மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட குருதிக் கொடையாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சான்றிதழ்களை வழங்கிக் கௌரவித்தார்.
கொழும்பு தேசிய இரத்த மாற்றீட்டு சேவை, யாழ்ப்பாணம் பிராந்திய இரத்த வங்கி, ஆகியவற்றுடன் யாழ்ப்பாணம் போதனவைத்தியசாலையும் இணைந்து இச் செயற்றிட்டத்தை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது, வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ரவீந்திரன், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் திருமதி யூட், ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி டாக்டர் பவானி பசுபதிராஜா, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன், யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை படைத்தரப்பினர் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்.