Ad Widget

இந்தோனேசியாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு!!

மேற்கு இந்தோனேஷியாவில் வார இறுதியில் திடீர் வெள்ளம் மற்றும் எரிமலையிலிருந்து பெருக்கெடுத்த குளிர்ந்த லாவா குழம்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளதோடு, 17 பேர் காணாமல்போயுள்ளதாக சுமாத்ரா அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை மாலை பல மணிநேரம் பெய்த கடும் மழையால் இந்தோனேசியாவின் மிகவும் தீவிரமான உயிர்ப்பு எரிமலைகளில் ஒன்றான மராபி எரிமலையில் இருந்து பாறைகள் உருண்டு சுமத்ரா தீவில் இரண்டு மாவட்டங்களுக்குள் வீழ்ந்துள்ளன.

அதேவேளை வீதிகள், வீடுகள் மற்றும் பள்ளிவாசல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

“நேற்று இரவு நிலவரப்படி, 37 பேர் உயிரிழந்ததாக நாங்கள் பதிவு செய்துள்ளோம். ஆனால் இன்று காலை அந்த எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளதாக சுமாத்ரா அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளான அகம் மாவட்டத்தில் 3 பேரும், தனாஹ் தாதர் நகரில் 14 பேருமாக 17 பேர் காணாமல் போயுள்ளார்கள். அவர்களை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.

கடும் மழை காரணாக கூடாரங்களில் தங்குவதைவிட பாதுகாப்பான உறவினர்களின் இருப்பிடங்களுக்கு மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக வெளியேற்றப்பட்ட உள்ளூர்வாசிகளின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை என சுமாத்ரா அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் மழையால் சுற்றுப்புறங்கள் சேறும் சகதியுமான வெள்ள நீரில் மூழ்கியுள்ளதோடு, வாகனங்கள் அருகிலுள்ள ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அதேவேளை, எரிமலை சாம்பல் மற்றும் பெரிய கற்பாறைகள் மராபி எரிமலையில் இருந்து கீழே விழுந்துள்ளன.

Related Posts