இந்து ஆலயங்களின் மீதான தாக்குதலை கண்டித்து யாழ். நகரில் பேரணி

Hindu-templeஇந்து ஆலயங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை யாழ். நகரில் கண்டனப் பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது. இந்தப் பேரணிக்கான ஏற்பாடுகளை விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு மேற்கொண்டுள்ளது.

அண்மைக் காலமாக நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்து ஆலயங்கள் மீதான தாக்குதல்கள், ஆலயங்களில் பெறுமதிமிக்க பொருள்கள் சூறையாடப்படுதல் ஆகியவற்றைக் கண்டித்தே இந்தப் பேரணி இடம்பெறவுள்ளது.

இன்று காலை 9 மணிக்கு நல்லூர் முன்றலில் இருந்து ஆரம்பமாகும் இந்தக் கண்டனப் பேரணி யாழ். மாவட்டச் செயலகத்தில் நிறைவடையும். இறுதியில் யாழ். மாவட்ட அரச அதிபரிடம் மனுவும் கையளிக்கப்படவுள்ளது.

இந்தப் பேரணியில் யாழ். மாவட்டத்திலுள்ள இந்து ஆலய நிர்வாகிகள் இந்து மன்றங்கள், இந்து குருமார்கள் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் யாழ். பல்கலைக்கழகம் கல்வியியல் கல்லூரி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைவரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் இணைப்பாளர் கேட்டுள்ளார்.