Ad Widget

இந்திய வீட்டுத்திட்டத்திலிருந்து நிராகரிக்கப்பட்ட 8 குடும்பங்களையும் உள்வாங்குமாறு விஜயகலா உத்தரவு

யாழ்ப்பாணம், பொம்மைபெவளி பிரதேச இந்திய வீட்டுத்திட்ட பயனாளிகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 8 பயனாளிகளையும் உடனடியாக அந்த பட்டியலில் இணைத்து அவர்களுக்கான வீட்டு வசதியைப் பெற்றுக்கொடுக்குமாறு மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், உரிய அதிகாரிகளுக்கு நேற்று புதன்கிழமை (11) பணிப்புரை விடுத்தார்.

vijaya-kala

இந்திய வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டு, கடைசி நேரத்தில் நிராகரிக்கப்பட்ட 8 பயனாளிகளின் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக அப்பகுதிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அம்மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

இந்திய வீட்டுத்திட்டம் கடந்த 3 வருடங்களாக நடைபெற்று வருகின்றன. 3ஆம் கட்ட நிர்மாணப் பணிகளும் முடிவுற்றுள்ளன. இருந்தும் மீள்குடியேறியுள்ள முஸ்லீம் மக்கள் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளனர். இந்திய வீட்டுத்திட்டத்தில் சதி நடைபெற்றுள்ளது. அனாமதேய கடிதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன. 314 பயனாளிகளின் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டும், அதில் 42 பயனாளிகளுக்கு வீட்டுத்திட்டத்துக்காக தெரிவு செய்யப்பட்டனர்.

42 பயனாளிகளில் 8 பயனாளிகள் தங்கள் முன்னைய கொட்டில் வீடுகளை உடைத்து இந்திய வீட்டுத்திட்டத்துக்கான வேலைகளை ஆரம்பித்தபோது, 8பேருக்கும் வீடுகள் கிடையாது என யாழ்ப்பாணப் பிரதேச செயலகமும் இந்திய வீட்டுத்திட்ட அதிகாரியும் கூறிவிட்டார்கள். இதனால் பழைய வீடும் இல்லாமல் புதிய வீடும் இல்லாமல் 8 குடும்பமும் நிர்க்கத்தியான நிலையில் உள்ளனர் என பொதுமக்கள் அமைச்சருக்கு கூறினர்.

மக்களின் கோரிக்கையை உள்வாங்கிய பிரதியமைச்சர், யாழ்.பிரதேச செயலாளர் திருமதி சுகுணவதி தெய்வேந்திரனை உடனடியாக பொம்மைவெளிக்கு வருமாறு வேண்டுகோள் விடுத்தார். பிரதேச செயலாளருடன், திட்டமிடல் அதிகாரியும் செஞ்சிலுவை சங்க வீட்டுத்திட்ட அதிகாரிகளும் வருகை தந்தனர்.

ஆதாரமற்ற முறைப்பாட்டின் பிரகாரம் 8 பேருக்கு வீட்டுத்திட்டம் வழங்காமை மனிதாபிமானமற்ற செயல் என பிரதியமைச்சர் இதன்போது அவர்களுக்கு சுட்டிக்காட்டினார். 314 பயனாளிகளுக்கும் வீடுகள் கட்டிக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பிரதி அமைச்சர், பாதிக்கப்பட்ட 8 பேரையும் வீட்டுத்திட்டத்தில் உடனடியாக உள்வாங்கும்படி கட்டளை பிறப்பித்தார். இது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடுவதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.

Related Posts