இந்திய வீட்டுத்திட்டத்திற்கு ஊர்காவற்றுறையில் 150 குடும்பங்கள் தெரிவு

india_houseயாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 150 குடும்பங்கள் இந்திய வீட்டுத்திட்டம் பெறுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் திருமதி எழிழரசி அன்ரன் யோகநாயகம் இன்று தெரிவித்தார்.

ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் இந்திய வீட்டுத் திட்டத்திற்காக 15 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 441 குடும்பங்கள் விண்ணப்பித்திருந்து அவர்களின் விபரங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.

இருந்தும், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, குடும்ப உறுப்பினர்களின் வயது ஆகியவற்றின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டு, அதில் கூடிய புள்ளிகள் பெற்ற 8 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 150 குடும்பங்களே இத்திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, அனலைதீவு வடக்கில் 7 வீடுகளும், அனலைதீவு தெற்கில் ஒரு வீடும், பருத்தியடைப்பில் 19 வீடுகளும், கரம்பன் மேற்கில் 41 வீடுகளும், கரம்பனில் 13 வீடுகளும், நாரந்தனை வடமேற்கில் 45 வீடுகளும், நாரந்தனையில் 5 வீடுகளும், புளியங்கூடலில் 19 வீடுகளும் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.

தெரிவுசெய்யப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான செயன்முறை விளக்கக்கூட்டம் கடந்த புதன்கிழமை (12) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றபோது, குறித்த வீடுகளை 6 இலிருந்து 8 மாதங்களுக்குள் கட்டி முடிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டோம் என பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.