இந்திய மீனவர்களை தடுக்க புதிய வழிமுறை : கடற்படை தளபதி

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினையை தீர்க்க வித்தியாசமான ஒரு நடைமுறை பின்பற்றப்படும் என கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார்.

கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதல் செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்

இந்திய மீனவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை ஒரு போதும் முன்னெடுக்க போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மாறாக இந்திய கடல் எல்லை எது என்பது தொடர்பில் இந்திய மீனவர்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களுக்கு உதவியளிக்க போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் வருகை தந்தால் அவர்களுக்கு கடல் எல்லை தொடர்பில் தெளிவுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இலங்கை கடல் எல்லையை விரிவாக்கி, கடல் எல்லை தொடர்பில் அவர்களுக்கு பூரண தெளிவை பெற்று கொடுக்க நினைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு செய்தால் இந்திய மீனவர்களின் வருகையை குறைக்க முடியும் ஆனால் கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் சுட்டிகாட்டினார்.

மேலும் இந்திய கடற்படை மற்றும், கடலோர காவற்படை ஆகியவற்றின் உதவியுடன் இதனை செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மீனவர் பிரச்சினை என்பது ஒரே இரவில் தீர்க்கப்பட முடியாத ஒன்று எனவும் அது மிகவும் பழமைவாய்த பிரச்சினை எனவும் அவர் கூறினார்.

மீனவர்கள் தொடர்பில் அரசாங்கம் விதித்துள்ள கூடுதலான அபராத தொகை காரணமாக தற்போது இந்திய மீனவர்களின் வருகை குறைந்துள்ளது, அந்த அபராத தொகையை அவர்களால் செலுத்த முடியாத காரணத்தால் இது குறைவடைந்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் வரலாற்று ரீதியான உரிமை தென்னிந்திய மீனவர்கள் கருதுகின்றார்கள் எனவும், அதன் காரணமாகவே அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் இந்திய அரசாங்கத்துடனும், இந்திய கடற்படையுடனும் மிக நெருக்கமாக செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மொத்தத்தில் இரு நாட்டு மீனவர்களுக்கும் உதவி செய்து அவர்களின் வாழ்வதாரத்திற்கு பங்களிப்பு செய்வதே கடற்படையின் நோக்கமாகும் எனவும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts