இந்திய மீனவர்களுக்கு எதிராக பாரிய போராட்டம் நடத்தப்படும்: இலங்கை மீனவர்கள் எச்சரிக்கை

fishermenஇந்திய இழுவைப் படகுகளின் எல்லை தாண்டிய மீன்பிடிக்கு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினர் தீர்வைப் பெற்றுதர வேண்டும். தவறும் பட்சத்தில் இந்திய மீனவர்களுக்கு எதிராக பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியை கட்டுப்படுத்துமாறு யாழ் மாவட்ட மீனவர்கள் சார்பில் பாதுகாப்பு அமைச்சு, இந்திய துணைத்தூதுவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளபோதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் எமிலியாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இதனால் எமது கடல் வளங்கள் பாதிக்கப்படுவதோடு நாள் தோறும் எமது மீனவர்களின் சொத்துக்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் இரு நாட்டு அரசுகளும் விரைவில் தீர்வைக்கான முன்வர வேண்டும்.

இந்த எல்லை தாண்டிய மீன்பிடி முறைக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வை பெற்றுத்தர வேண்டும். அவ்வாறு 15ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு சாதகமான தீர்வு கிடைக்காவிட்டால் இந்திய மீனவர்களுக்கு எதிராக பாரிய போராட்டம் மேற்கொள்ள நேரிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.