இந்திய பிரதித் தூதுவர் கைதடி பனை ஆராய்ச்சி நிலையத்திற்கு விஜயம்

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதித் தூதுவர் ஸ்ரீ.பி.குமரன் மற்றும் வெளிவிவகார அமைச்சின் உதவி செயலாளர் பி.எஸ்.ராகவன் உட்பட பலர் கைதடியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிலையத்தினை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டனர்.

பனை அபிவிருத்தி சபை தலைவர் பசுபதி சீவரத்தினம் தலைமையில் மதியம் 3.00 மணிக்கு வருகை தந்த குழுவினர் பனை உற்பத்தி பொருட்கள் மற்றும் இராசாயண கூடத்தினை பார்வையிட்டனர்.

பனை அபிவிருத்தி சபைக்கு இந்திய அரசாங்கத்தினால் கையளிக்கப்பட்ட உபகரணங்களையும் அவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பனைசார் உணவுப் உற்பத்தி பொருட்கள் மற்றும் செயற்படுத்தும் முறைகள் பற்றியும் ஆராய்ந்தனர்.

பலாலி விமான நிலையத்திற்கு காலை வருகை தந்த இக்குழுவினரை இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் எம்.மகாலிங்கம் வரவேற்றார்.

அதன் பின்னர் யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் அதகாரிகளுக்கிடையில் சிறு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அதனைத் தெடர்ந்து, வடமாகாண ஆளுநர் ஜ.ஏ.சந்திரசிறியின் அலுவலகத்தில், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உட்பட பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவையாளர்களுடன் இந்திய வீட்டுத் திட்டம் குறித்து கலந்துரையாடினர்.

அத்துடன் எழுமட்டுவானில் இந்திய வீட்டுத்திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளை அவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

அதேவேளை, இந்த குழுவினர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்யவுள்ளதுடன், கிளிநொச்சி மாவட்டத்தின் மலையாளபுரம், சிவபடகல்யாகம் பாடசாலை மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு உபகரணங்கள் கையளிக்கவுள்ளனர்.

அத்துடன் மாங்குளத்தில் இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் புகையிரத வேலைத்திட்டங்களையும் பார்வையிடவுள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் எம்.மகாலிங்கம் தெரிவித்தார்.