இந்திய துணைத் தூதர் வெ.மகாலிங்கத்திற்கு இடமாற்றம்

Consul_General_of_India_in_Jaffna_V_Mahalingamயாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சல் ஜெனரல் வெங்கடாசலம் மகாலிங்கம், தென்னமெரிக்காவிலுள்ள கயானா கூட்டுறவுக் குடியரசுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகம் நவம்பர் 2010இல் ஆரம்பிக்கப்பட்ட போது முதலாவது துணைத் தூதராக நியமனம் பெற்று கடமையாற்றி வந்த வெ.மகாலிங்கத்திற்கு இராஜதந்திரத் துறையில் இருபது வருடத்திற்கு மேற்பட்ட அனுபவம் உள்ளது.

அஹமதாபாத்திலுள்ள புகழ்பூத்த முகாமைத்துவத்துக்கான இந்திய நிறுவனத்தின் முகாமைத்துவப் பட்டதாரியும், பொறியியலாளருமான இவர் ஜகார்த்தா, கோலாலம்பூர் மற்றும் சக்ரெப் ஆகிய இடங்களிலுள்ள இந்தியத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார்.

அத்துடன் சென்னை, டெல்லி ஆகிய இடங்களில் பிராந்தியக் கடவுச்சீட்டு அதிகாரி உள்ளிட்ட பதவிகளில் வெளிவிவகார அமைச்சில் சேவையாற்றியுள்ளார்.

இவர், இந்திய உயர்ஸ்தானிகராக வெகு விரைவில் தனது கடமைகளை கயானாவில் பொறுப்பேற்பார் என யாழ். இந்தியத் துணைத்தூதர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.