இந்திய அகதி முகாமிலுள்ள இலங்கை மாணவியின் உயர்க்கல்விக்கு உதவிய ‘அகரம்’

Agaramதமிழகம், மார்த்தாண்டத்திலுள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த இலங்கை மாணவியொருவரின் உயர்க்கல்விக்கு தென்னிந்திய நடிகர் சூர்யா நடத்தி வரும் ‘அகரம்’ அறக்கட்டளை உதவ முன்வந்துள்ளது.

இந்நிலையில், அம்மாணவி சென்னையிலுள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இணைந்து பொறியியல் பிரிவில் கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளை அகரம் அறக்கட்டளை மேற்கொண்டுள்ளது.

மார்த்தாண்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த செல்வி தினுசியா, பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து பொறியியல் கல்லூரியில் சேர அனுமதி பெற்றார்.

தினுசியாவிற்கு நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் சேர அனுமதி கிடைத்த நிலையில் அக்கல்லூரியில் 25 ஆயிரம் ரூபா பணம் செலுத்தி அவரின் கல்வியைத் தொடர தமிழ் உணர்வாளர்கள் உதவினர்.

ஆனால் அதற்கு மறுநாளே அகரம் அறக்கட்டளையில் இருந்து தினுசியாவிற்கு அழைப்பு வந்தது. சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்க இடம் ஏற்பாடு செய்திருப்பதாக அகரம் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர். நான்கு ஆண்டுகள் படிப்பிற்கான செலவையும் உணவு மற்றும் விடுதிக்கான செலவையும் அகரமே ஏற்க உள்ளதாக தெரிவித்தனர்.

அதனால் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் தினுசியா செலுத்திய பணம் திரும்பப் பெறப்பட்டது. அந்த பணத்தை அகதிகள் முகாமில் உள்ள ஏனைய மாணவர்களின் கல்லூரி சேர்க்கைக்கு பயன்படுத்துவதாக மார்த்தாண்டம் அகதிகள் முகாமின் தலைவர் பிரேம் கூறினார்.

இலங்கையில் இருந்து வந்து அகதிகள் முகாமில் இத்தனை ஆண்டுகள் காலத்தை கழித்த தினுசியாவிற்கு இனி புதிய அனுபவம் சென்னையில் காத்துக் கொண்டிருப்பதாக செய்தி மற்றும் சமூக வலைத்தளங்கள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றன.

அகதிகள் முகாமில் இருந்து எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இடம்பிடித்த ஒரே மாணவி செல்வி தினுசியா தான் என்பது மற்றுமொரு பெருமையான தகவல்.

தக்க தருணத்தில் உதவிக் கரம் நீட்டி மாணவியின் வாழ்கையில் ஒளியேற்றிய அகரம் அறக்கட்டளைக்கும் அதன் நிறுவனர் நடிகர் சூர்யாவுக்கும் மேற்படி வலைத்தளங்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளன.