இந்தியா, கனடா கலந்துகொள்ளாததை வரவேற்கின்றோம்: கஜேந்திரகுமார்

Kajentherakumarஇலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா, கனடா, மொரிஸியஸ் ஆகிய மூன்று நாடுகள் கலந்துகொள்ளாததை ஆதரிப்பதுடன், அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஈழத் தமிழர்களையும், புலம்பெயர் தமிழர்களையும் புறக்கணிக்கும் கருத்துக்களை சிலர் வெளியிட்டு வருகின்றார்கள். எதிர்காலத்தில் தமிழர்களின் தேவைகள், பிரச்சினைகள் அந்தந்த நாடுகளின் இருப்பு சார்ந்த பிரச்சினையாக மாறவிருக்கின்றது.

எதிர்காலத்தில் தமிழ் நாட்டையும் புலம்பெயர் மக்களை எமது சொத்தாக கருதி எமது மண்ணுக்கும் தமிழகத்திற்கும் இடையில் இறுக்கமான உறவினை ஏற்படுத்தும் நோக்குடன் செயற்பட வேண்டும்.

புலம்பெயர் வாழ் தமிழ் மக்களையும், பிற மக்களையும் எமது கைகளை விரித்து அவர்களை அரவணைத்து, எமக்கு தேவையான உதவிகளை பெறும் திட்டங்களை வகுக்க வேண்டுமென்பதுடன். அவர்கள் அதற்காக உதவி செய்யவும் முன்வரவேண்டும்.

சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி விசுவலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.