இந்தியாவானது இலங்கையுடன் ஒரு நம்பிக்கையான பங்காளியாக இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து செயற்படுவதுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திக்காக இந்தியா தொடர்ந்தும் கைகோர்க்கும் என்று யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய கவுன்சிலர் ஜெனரல் வே.மகாலிங்கம் தெரிவித்தார்.
யாழ். ஐந்தாவது சர்வதேச வர்த்தக் கண்காட்சி நேற்று முதல் ஆரம்பமானது. இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் ஆரம்ப வைபவத்தில் பங்காளி நாடு என்ற தனித்துவத்தோடு ஐந்தாவது தடவையாகவும் கலந்துகொள்வது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இருநாடுகளிடையிலும் வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தலில் இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்படும் உயர் முன்னுரிமையை இதுகுறிக்கிறது.
இலங்கையிலுள்ள இந்திய நிறுவனங்களின் பரந்துபட்ட இருப்பினால் இலங்கைப் பொருளாதாரம் பல நன்மைகளைப் பெற்றுள்ளது என்பது திண்ணம். அண்மைக் காலங்களில் பரந்து செல்லும் முதலீடு மற்றும் வர்த்தகத்துறைகளுள்ளிட்ட சுறுசுறுப்பான பொருளாதார வணிகத் தொடர்புகளை இலங்கையும் இந்தியாவும் பேணுகின்றன.
இந்திய-இலங்கை வர்த்தகத்தில் கடந்த வருடங்களாக மந்தநிலை காணப்படுகிறது. 2011ஆம் ஆண்டில் 30 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த ஒட்டுமொத்த இருபக்க வர்த்தகம் 2013 ஆம் ஆண்டில் 24.5 பில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்தது. உலக பொருளாதாரம் முன்னேறுகையில் இந்திய இலங்கை வர்த்தகமும் வளர்ச்சியடையும் என திடமாக நம்புகிறேன்.
இலங்கை இந்திய உறவில் வர்த்தகமானது ஒரு முகமாக அமைவதையும் வடமாகாணத்தைப் பொறுத்த அளவில், அபிவிருத்திப் பங்காளித்துவச் செயற்றிட்டங்களே அதிகமாக காணப்படுகின்றது. அபிவிருத்திக்காக இலங்கையுடன் கைகோர்ப்பதில் இந்தியா பெருமையடைகிறது.
கடந்த நான்கு வருடங்களில் இந்தியாவானது இலங்கைப் பொருளாதாரத்திலும், மக்களின் வாழ்வாதாரத்திலும் நேரடி விளைவை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு துறைகளில் முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளது. வீட்டுநிர்மாணம் கல்வித் துறை, சுகாதாரத்துறை வாழ்வாதாரத்துறை போன்ற பல்வேறு துறைகளில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளது.
விமான சேவையும் தலைமன்னார் – இராமேஸ்வரம் படகு சேவையும் அமையும். இவை மக்களிடையான உறவை வளர்ப்பதுடன் வர்த்தக கொருளாதார உறவுகளையும் மேம்படுத்தும். வட இலங்கையின் பொருளாதார விருத்திக்கு பெரும் உந்துதலாக அமையும் இவ்விரண்டும் விரைவில் நிகழ வேண்டும் என ஆவலோடு உள்ளோம்.
நாட்டின் பல்வேறு பலங்களைக் காட்சிப்படுத்த சர்வதேச வர்த்தகக் கண்காட்சிகள் முக்கியமாக இருக்கும். அதேவேளையில், நான் முன்னர் குறிப்பிட்ட முயற்சிகள் பொதுமக்களைப் பரந்த அளவில் சென்றடையவும் ஒருவருடன் ஒருவர் நல்ல உறவைக் கட்டியெழுப்பவும் ஊக்கம் அளிக்கின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.